பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) உச்சிமாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவிற்கு தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த ஆவலுடன் இருப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக எதிர்பார்க்கப்படும் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சாத்தியமான சந்திப்பில் அனைவரின் பார்வையும் உள்ளது. செவ்வாயன்று, இரு தலைவர்களும் மற்ற பிரிக்ஸ் (BRICS) தலைவர்களுடன் தலைவர்கள் ஓய்வு இல்லத்தில் சந்தித்தனர்.
இதையும் படியுங்கள்: வெங்காயம் ஏற்றுமதி வரிக்கு எதிராக போராட்டம்: விவசாயிகள் உடன் இணைந்த பா.ஜ.க கூட்டணி கட்சி
முன்னதாக மாலையில் நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் உரையாடலில் பேசிய மோடி, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு இந்திய மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என்று கூறினார். "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்," என்று மோடி கூறினார்.
“கோவிட்-19 தொற்றுநோய், மீள் மற்றும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பித்துள்ளது. இதை அடைய பரஸ்பர நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியம். உலகளாவிய தெற்கின் நலனுக்காக நாம் கூட்டாகச் செயல்பட முடியும் மற்றும் அதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்,” என்று மோடி கூறினார்.
இந்தியா விரைவில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்று வலியுறுத்திய மோடி, வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்றும், தனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் "மிஷன்-மோட்" (மிக விரைவான செயல்பாடுகள்) சீர்திருத்தங்களால் எளிதாக வணிகம் செய்ய முடியும் என்றும் கூறினார்.
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவில் இருப்பதாகவும், நாட்டில் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள தனியார் நிறுவனங்கள்) இருப்பதாகவும் மோடி கூட்டத்தில் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள வாட்டர் குளோஃப் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய மோடியை தென்னாப்பிரிக்காவின் துணை அதிபர் பால் மஷாடைல் வரவேற்றார். மோடிக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
”தென்னாப்பிரிக்காவிற்கு பிரதமரின் மூன்று நாள் பயணமானது, 15வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பது மற்றும் பிரிக்ஸ் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் பலதரப்பு மற்றும் இருதரப்பு அமைப்புகளில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்" என்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, உச்சிமாநாட்டிற்குப் புறப்படும்போது, எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும், நிறுவன வளர்ச்சியை மறுபரிசீலனை செய்யவும் பிரிக்ஸ் உறுப்பினர்களுக்கு இந்த மாநாடு ஒரு பயனுள்ள வாய்ப்பை வழங்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
”பிரிக்ஸ் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறது. வளர்ச்சித் தேவைகள் மற்றும் பலதரப்பு அமைப்பின் சீர்திருத்தங்கள் உட்பட, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கின் கவலைக்குரிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும் ஆலோசிப்பதற்கும் பிரிக்ஸ் ஒரு தளமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் மதிக்கிறோம்," என்று உச்சிமாநாட்டிற்கு புறப்படும்போது மோடி கூறினார்.
”இந்த உச்சிமாநாடு பிரிக்ஸ் அமைப்புக்கு எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும் நிறுவன வளர்ச்சியை மறுபரிசீலனை செய்யவும் ஒரு பயனுள்ள வாய்ப்பை வழங்கும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவும் நான் எதிர்நோக்குகிறேன்," என்று மோடி கூறினார்.
“ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறேன். BRICS-Africa Outreach மற்றும் BRICS Plus உரையாடல் நிகழ்வுகளிலும் நான் பங்கேற்பேன். இந்த உச்சிமாநாடு உலகளாவிய தெற்கு மற்றும் வளர்ச்சியின் பிற பகுதிகளுக்கு கவலையளிக்கும் விஷயங்களை விவாதிக்க மேடையை வழங்கும்,” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென்னாப்பிரிக்காவுக்கு மோடி செல்கிறார். மூன்று வருட காணொலி வாயிலான சந்திப்புகளுக்குப் பிறகு இந்த முறை பிரிக்ஸ் உச்சிமாநாடு நேரடியாக நடைபெறுகிறது.
புதன்கிழமை, BRICS தலைவர்களின் உச்சிமாநாட்டின் முழுமையான அமர்வுகளில் மோடி பங்கேற்பார், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள், பல்தரப்பு அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மூடிய முழுமையான அமர்வு இருக்கும்.
வியாழன் அன்று, தென்னாப்பிரிக்காவால் அழைக்கப்பட்ட பிற நாடுகளை உள்ளடக்கிய உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்படும் "பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் டயலாக்" என்ற சிறப்பு நிகழ்வில் மோடி பங்கேற்கிறார். இந்த அமர்வுகளின் போது, உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகள் விவாதிக்கப்படும், அங்கு ஆப்பிரிக்காவுடன் கூட்டுறவில் கவனம் செலுத்தப்படும்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் மோடி ஏதென்ஸ் செல்கிறார். "40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு" என்று மோடி தனது புறப்பாடு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"நமது இரு நாகரிகங்களுக்கிடையிலான தொடர்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு, நவீன காலத்தில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் நமது உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன," என்று மோடி கூறினார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பு நமது இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வருகிறது, என்று மோடி கூறினார். கிரீஸ் நாட்டுக்கு சென்று பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறிய மோடி, அங்குள்ள இந்திய சமூகத்தினருடனும் தொடர்புகொள்வதாகவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.