பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பரீட்சை அறையில் அமர்வதுபோல தனித்தனியாக இடைவெளிவிட்டு அமர்ந்து சமூக விலகலைக் கடைபிடித்தனர்.
டெல்லியில் லோக் கல்யாண் மார்க்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் பரீட்சை அறையில் அமர்வதுபோல தனித்தனியாக இடைவெளிவிட்டு அமர்ந்து சமூக விலகலைக் கடைபிடித்தனர். மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிப்பதற்கான உத்திகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசும்போது, அடுத்த 3 வாரங்களுக்கு நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அறிவித்தார். அப்போது, பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட மக்கள் சமூக விலகலைக் கடை பிடிக்குமாறு வலியுறுத்தினார். 21 நாள் நீண்ட ஊரடங்கு உத்தரவை அறிவித்த பிரதமர் மோடி, உங்களை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், உங்கள் பாதுகாப்பிற்கும் உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பிற்கும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு கடை கோடி கிராமத்தில் இருக்கும் குடிமகன் முதல் ஒவ்வொரு இந்தியரும் இதனை கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் இந்த பேரழிவின் தாக்கத்தை எந்தளவுக்கு குறைக்க முடியும் என்பதை நம்முடைய தற்போதைய நடவடிக்கைகள்தான் தீர்மானிக்கும் என்ற நிலையில் உள்ளதாக பிரதமர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று 2வது முறையாக நாட்டுமக்களிடையே பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைத் சமாளிக்க சமூக விலகலைக் கடைபிடிப்பதே ஒரே தீர்வு என்று கூறினார். மேலும், “இந்த ஊரடங்கு உத்தரவு முடிவு மூலம் உங்கள் வீட்டு வாசல்களில் ஒரு லட்சுமண ரேகை கோடு போடப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு ஒரு அடி எடுத்துவைத்தால் கொரோனா உங்கள் வீட்டில் காலேடுத்து வைக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ” பிரதமர் மோடி எச்சரித்தார். பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு அறிவித்த சில நிமிடங்களிலேயே மளிகை கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கூடியதால், ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அவர் தெளிவாக கூறினார்.
தற்போது இந்தியாவில், 562 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.