தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் பரவலைத் தடுப்பதில் இந்தியா முனைப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதற்காக சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் அதிகாரிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமையன்று, சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமிக்ரான் மாறுபாடு குறித்தும் அதன் பண்புகள், பல்வேறு நாடுகளில் அதன் தாக்கம் மற்றும் இந்தியாவிற்கு அதன் தாக்கங்கள் குறித்து விளக்கினர். அப்போது, தீவிரமான கட்டுப்பாடு மற்றும் புதிய கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் பதிவாகும் கிளஸ்டர்களில் உயர் கண்காணிப்பு தொடர வேண்டும் என்று மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்தின் போது, அனைத்து சர்வதேச நாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு வருவோர்களை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக ஒமிக்ரான் பரவி வரும் நாடுகளில் இருந்து வருவோர்க்கு, வழிகாட்டுதல்களின்படி பரிசோதனை உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் மோடி எடுத்துரைத்தார். "வெளிவரும் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்" என்று PMO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது, இந்தியாவின் மரபணு வரிசைமுறை முயற்சிகள் மற்றும் நாட்டில் புழக்கத்தில் உள்ள மாறுபாடுகள் பற்றிய கண்ணோட்டம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. கோவிட்-19 நிர்வாகத்திற்காக அடையாளம் காணப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை சமிக்ஞை மூலம், சர்வதேச பயணிகள் மற்றும் சமூகத்திடம் இருந்து மரபணு வரிசை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, INSACOG இன் கீழ் ஏற்கனவே நிறுவப்பட்ட ஆய்வகங்களின் நெட்வொர்க் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். வரிசைப்படுத்தல் முயற்சிகளை அதிகரிக்கவும், அதை மேலும் பரந்த அடிப்படையிலானதாக மாற்றவும் வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பிரதமர் பேசினார்,” என்று PMO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் சரியான விழிப்புணர்வு இருப்பதை உறுதி செய்ய, மாநில அரசுகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டார். "அதிக பாதிப்புகளைப் பதிவு செய்யும் கிளஸ்டர்களில் தீவிர கட்டுப்பாடு மற்றும் உயர் கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும், தற்போது அதிக பாதிப்புகளைப் பதிவு செய்யும் மாநிலங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்" என்று PMO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளால் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் பற்றி, இது மிகவும் பரவக்கூடியது, இந்தியா உட்பட பல நாடுகளை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க தூண்டியது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது, இது டெல்டா மாறுபாட்டை விட ஆபத்தானது. தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இது இதுவரை பதிவாகியுள்ளது என்று WHO விவரித்தது.
இதனிடையே, ஒமிக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயனிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதம் கட்டாயம் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.