/indian-express-tamil/media/media_files/2025/08/31/pm-modi-xi-xingping-2-2025-08-31-12-55-29.jpg)
மோடி மற்றும் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் இரு தரப்பு முக்கிய அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். Photograph: (PTI)
கசான் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருக்கின்றன என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, "பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வுபூர்வமாக இருப்பது" ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, தியான்ஜினில் (பெய்ஜிங்கில் இருந்து சுமார் 120 கி.மீ தொலைவில்) அதிபர் ஷியைச் சந்தித்த மோடி, கசான் நகரில் இருவரும் "பயனுள்ள உரையாடலை" நடத்தியதாகவும், எல்லையில் மோதல் விலக்கலுக்குப் பிறகு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் எல்லை மேலாண்மை குறித்து உடன்பாடு எட்டியுள்ளதாகவும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், இரு நாடுகளும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் சீனாவில் வாழும் 2.8 பில்லியன் மக்களின் நல்வாழ்வு, இரு நாடுகளுக்கு இடையிலான "ஒத்துழைப்பைப்" பொறுத்தது என்றும், இது மனிதகுலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும் என்றும் மோடி கூறினார்.
சிறப்பான வரவேற்புக்கு அதிபர் ஷிக்கு நன்றி தெரிவித்த மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்.சி.ஓ) அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு அவரைப் பாராட்டினார்.
மோடி மற்றும் ஷி ஆகிய இருவரும் இரு தரப்பு முக்கிய அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். இந்தியத் தரப்பில், பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடன் இருந்தனர். சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர் வாங் யி அதிபர் ஷியுடன் அமர்ந்திருந்தார்.
கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஐந்து ஆண்டுகளாக நீடித்த ராணுவ மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் உறவுகளைச் சீரமைக்க முயற்சித்து வரும் நிலையில், எஸ்.சி.ஓ உச்சிமாநாடு தொடங்குவதற்கு முன்பு இரு தலைவர்களும் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் சந்தித்தனர்.
10 மாதங்களுக்குள் இரு தலைவர்கள் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். மோடி மற்றும் ஷி கடைசியாக அக்டோபர் 2024 இல் ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாகச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளுக்கு ஒரு சிறப்பான உந்துதலை அளிக்கப் போகின்றன என்பதைக் காட்டுகிறது. மேலும், உறவுகளை "படிபடியாக நிலைநிறுத்துவதற்கு" டெல்லி ஆர்வமாக உள்ளது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டிற்காக பிரதமர் ஜப்பானிலிருந்து சீனாவுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகப் பயணம் செய்தார்.
“சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கினேன். எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டில் விவாதங்கள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறேன்,” என்று மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது அவரது கவனம் பன்முக உச்சிமாநாட்டின் மீது இருப்பதையும் சுட்டிக்காட்டியது.
அக்டோபர் 2024 இல் கசான் நகரில் நடந்த மோடி-ஷி சந்திப்பின் விளைவாக, கிழக்கு லடாக்கில் உள்ள இரண்டு முக்கிய மோதல் புள்ளிகளிலிருந்து படைகள் விலகின. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. சீன சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய விசாக்கள் வழங்கப்பட்டன. மேலும், இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
மே மாதத்தில், 'ஆபரேஷன் சிந்து' தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட மோதல்களின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா தீவிரமாக உதவி செய்ததற்கான ஆதாரங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தபோது, உறவுகளைச் சீரமைக்கும் இந்த முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. ஆகஸ்ட் 19 அன்று, வாங் யி டெல்லியில் மோடியைச் சந்தித்து, ஷாங்காய் ஒத்துழமைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஷியின் அழைப்பை வழங்கினார்.
கிழக்கு லடாக்கில் பதற்றத்தைக் குறைக்கும் கடினமான பிரச்சினை இன்னும் உள்ளது. இரு தரப்பினரும் அதிலும் முன்னேற ஒப்புக்கொண்டுள்ளனர். அந்தப் பகுதியில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சுமார் 50,000 முதல் 60,000 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.