தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய உடனேயே, நிலவில் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கினர். இந்தியா நிலவில் கால் பதித்ததன் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நிலவில் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா நிலவை வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி ஒரு வளர்ந்த இந்தியாவின் அடையாளம் என்று கூறினார்
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கியதைக் காணொலி வாயிலாக இணைந்து தேசியக் கொடியை அசைத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“இந்தியாவின் வெற்றிகரமான நிலவு பயணத்தின் வெற்றி இந்தியாவுக்கு மட்டும் அல்ல, இந்த வெற்றி மனிதகுலம் அனைவருக்கும் சொந்தமானது. இது பிற நாடுகளின் எதிர்கால நிலவு பயணங்களுக்கு உதவும்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
“சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில் புதிய இந்தியா உருவாகியுள்ளது. இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடைய வைத்துள்ளது. சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
“சந்திரயான் 3 வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி. நிலா நிலா ஓடி வா என பாடும் பாடலை விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளனர்.” என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”