நியூ டெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் விவசாயத் துறை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன்கள் விஷயத்தில் எந்தச் சூழ்நிலையிலும் இந்தியா சமரசம் செய்துகொள்ளாது என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உறுதியான கருத்துக்கள், அமெரிக்கா தனது விவசாய மற்றும் பால் பொருட்களுக்கு இந்திய சந்தையில் பூஜ்ய வரி விதிப்பை கோரிவரும் நிலையில் வெளிவந்துள்ளன. மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதிப் பொருட்கள் மீது கூடுதலாக 25% அபராத வரியை விதித்துள்ளார். இதனால், மொத்த வரி 50% வரை உயர்ந்துள்ளது. இதனால் இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "நமக்கான மிக உயரிய முன்னுரிமை நம் விவசாயிகளின் நலன்தான். இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவ சகோதர, சகோதரிகளின் நலன்களுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இதற்காக தனிப்பட்ட முறையில் நான் ஒரு பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இன்று, என் நாட்டின் விவசாயிகளுக்காக, என் நாட்டின் மீனவர்களுக்காக, என் நாட்டின் கால்நடை வளர்ப்போருக்காக இந்தியா தயாராக உள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், சாகுபடி செலவைக் குறைத்தல், மற்றும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குதல் ஆகிய இலக்குகளை நோக்கி நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்திற்கான அஸ்திவாரமாக விவசாயிகளின் வலிமையை எங்கள் அரசு அங்கீகரித்துள்ளது" என்று இந்தியில் ஆவேசமாக உரையாற்றினார்.
.இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், வேளாண் மற்றும் பால் பொருட்கள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இறக்குமதி செய்வதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்க வாய்ப்பில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஜூலை 26 அன்று செய்தி வெளியிட்டது.
"சில விஷயங்களில் கொள்கை ரீதியாக சமரசம் இல்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை நாம் இறக்குமதி செய்ய முடியாது" என்று ஒரு அரசு வட்டாரம் தெரிவித்திருந்தது. விவசாயம் தொடர்பான இந்த கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியும் (USTR) இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகள் பாரபட்சமானவை எனக் கூறி தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார்.
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பும், இந்தியாவின் பதிலடியும்
அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு ஆகஸ்ட் 25 அன்று புதுடெல்லிக்கு வருகை தரவிருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்ச்சியான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி, சில இந்தியப் பொருட்களின் மீது கூடுதலாக 25% வரியை விதித்துள்ளது. இது ஆகஸ்ட் 1 அன்று அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரியுடன் சேர்ந்து மொத்த வரியை 50% ஆக உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பால், வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "நியாயமற்றது, ஏற்க முடியாதது" என்று குறிப்பிட்டு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
"நமது இறக்குமதிகள் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம்" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். பிற நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்கும்போது, இந்தியா மீது மட்டும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முடிவெடுத்தது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம், என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.