PM Modi | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடந்து வரும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 4 ஆம் தேதிகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5வது கட்ட தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான வாக்குப் பதிவு 7 கட்ட தேர்தலில் நடைபெற உள்ளது.
மோடியின் சொத்து மதிப்பு
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மோடி தனது வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், தனக்கு சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி எனத் தெரிவித்துள்ளார். ரூ.52,920 ரொக்கமாகவும், ரூ.2,85,60,338 நிலையான வைப்பு ரசீதுகளாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மோடியிடம் ரூ.1.73 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. எந்தவொரு பத்திரத்திலும், பங்குகளிலும் அல்லது பரஸ்பர நிதிகளிலும் அவருக்கு முதலீடு இல்லை.
பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் அசையா சொத்துக்கள் எதையும் அறிவிக்கவில்லை. அதே சமயம் அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.3,02,06,889 என்று குறிப்பிட்டுள்ளார். மோடிக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் கிடையாது. காந்திநகரில் உள்ள நிலத்தில் தனது பங்கை தானமாக வழங்கியதால், மோடிக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிக்கப்பட்ட வருமானம் (ஐடிஆர்) ரூ.11.14 லட்சமாக இருந்த நிலையில், 2022-23ஆம் ஆண்டில் ரூ.23.56 லட்சமாக அதிகரித்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“