குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 133 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று (அக்.31) பனஸ்கந்தாவில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டார்.
"மோர்பியில் நடந்த சோகம் பயங்கரமானது மற்றும் வேதனையானது," என்று மோடி கண்கள் கலங்கியபடி கூறினார். மோர்பி விபத்தை தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த வேண்டுமா? என சிந்தித்தேன்.
ஆனால் உங்களின் அன்பும் ஆதரவும் நமது கலாசாரமும் கொடுத்த தைரியம் இது. இதுதான் என்னை இங்கு கூட்டிவந்தது” என்றார். தொடர்ந்து, குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தாராட் என்ற இடத்தில், வறண்டு கிடக்கும் பகுதியில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர் வழங்கல் தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டங்களில் சில நீர் விநியோக குழாய்கள், கால்வாய் மற்றும் 56 தடுப்பணைகள் கட்டுதல் ஆகியவையும் அடங்கும். முன்னதாக திங்கள்கிழமை காலை, மோடி ஒற்றுமை சிலையில் ஏக்தா தின அணிவகுப்பில் கலந்து கொண்டார், அங்கு மோர்பி பேரழிவு குறித்து வருத்தம் தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. மோர்பியில் நடந்த சோகத்தை அடுத்து நாடு முழுவதும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஏக்தா அணிவகுப்பு நடந்த கெவாடியாவில் பிரதமர், “ஒருபுறம், என் இதயத்தில் மிகுந்த வலி உள்ளது, மறுபுறம், நான் நடக்க வேண்டிய கடமையின் பாதை உள்ளது.
கடமையின் நிமித்தம் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன் ஆனால் என் மனம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் அரசு அவர்களுடன் உள்ளது மற்றும் மீட்புப் பணிகளை முழு பலத்துடன் மேற்கொண்டு வருகிறது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil