மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவடையும் குலாம் நபி ஆசாத் பணிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்து உரையாடிய பிரதமர் நரேந்திரமோடி, உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.
Advertisment
மாநிலங்களவையில் பேசிய பிரதமர், " மாநிலங்களைவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆசாத் உயர்ந்த தரத்தை அளித்தார். அதிகாரம், உயர்ப் பதவி உள்ளிட்டவற்றை எப்படி கையாள்வது என்பதை குலாம் நபி ஆசாத்டமிருந்து ஒருவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் அவரை என்றும் ஒரு உண்மையான நண்பராக கருதுவேன், ”என்று கூறினார்.
"குலாம் நபி ஆசாத் பாராளுமன்றத்தில் சிறந்து விளங்கினார். தான் சார்ந்த கட்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், சபை சீரான முறையில் இயங்குவது பற்றியும், நாட்டின் வளமான எதிர்காலத்தைப் பற்றியும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பணி வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும், ”என்றும் தெரிவித்தார்.
குலாம் நபி ஆசாத் உடனான தனது நட்புறவை பகிர்ந்து கொண்ட பிரதமர், “ குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்டபோது, அப்போது காஸ்மீர் முதல்வராக இருந்த ஆசாத் எடுத்த முயற்சிகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சிக்கித் தவித்தவர்களை தனது குடும்ப உறுப்பினர்கள் போல் கருதி மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்" என்று தெரிவித்தார்.
“குலாம் நபி ஆசாத்தை நான் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். ஒரே காலப்பகுதியில் இரு மாநில முதல்வர்களாக ஒன்றாக நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். நான் குஜராத் மாநில முதல்வர் பதிவி வருவதற்கு முன்பே, அவருடன் எனக்கு நட்பு உண்டு"என்றும் அவர் தெரிவித்தார்.
திங்களன்று, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து பேசும் போது கூட குலாம் நபி ஆசாத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஆசாத் பெரும்பாலும் கடுமையான சொற்களை தவிர்கக கூடியவர். ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடத்தியதை ஆசாத் பாராட்டியதை நினைவு கூர்ந்த அவர்," உங்கள் கட்சியில் உள்ளவர்கள் இந்த பாராட்டை சரியான மனப்பான்மையுடன் எடுத்துக்கொள்வார்களா என்று நான் அஞ்சுகிறேன். இதையும், ஜி23 தலைவர்களின் (கட்சியில் சீர்திருத்தம் கோரி எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட 23 தலைவர்கள்) கருத்தாக தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.