எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல ; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும், அது நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். இது பெரும்விவாதப்பொருளாக மாறியிருந்தது.
திராவிடர் தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலானார் கமலின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை, பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா. பா.ஜ. மூத்த நிர்வாகி எஸ்.வி. சேகர், நடிகை காயத்ரி ரகுராம் மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் நெட்டிசன்களும் கமலின் இந்து தீவிரவாதி கருத்திற்கு கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல ; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின், அவர் நிச்சயம் இந்துவாக இருக்கமுடியாது. இந்துமதம் அமைதியை போதிக்கிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை. அதைத்தான் இந்துமதம் மக்களிடம் போதிக்கிறது என்று மோடி கூறியுள்ளார். கமலின் இந்து தீவிரவாத கருத்திற்கு, பிரதமர் மோடியின் இந்த பேட்டி தக்க பதிலடியாக கருதப்படுகிறது.
ஆர்எஸ்எஸ், இந்துசபா உள்ளிட்ட சில அமைப்புகளின் சார்பில், கமலின் இந்து தீவிரவாத கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.