ஒவ்வொரு வருடமும் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி திருநாளை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வருட தீபாவளியை ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். இந்த விழாவில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஏழாவது முறையாக ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி.
வடக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பலியாகினர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது முக்கியத்துவம் பெறுகிறது.
ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, " இந்தியா அமைதியையும், நட்புறவையும் பேணிப்பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது, ஆனால், இந்த அர்ப்பணிப்பு உணர்வை, இந்தியாவின் பலவீனமாக யாரும் கருதமுடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், சில நாடுகள் தங்களது எல்லையை விரிவாக்கம் செய்ய எண்ணுவதாகவும், பிற்போக்குதனமான இந்த அத்துமீறல்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலுவாக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு துறையில் நாடு தன்னிறைவு அடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மோடி," உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்".
எல்லையை காக்கும் நமது ராணுவ வீரர்களை உலகின் எந்தவொரு சக்தியும் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். வீரர்களுக்கு 130 கோடி இந்தியர்களும் துணை நிற்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
முன்னதாக, பிரதமர் மோடி மக்கள் அனைவரிடமும், நம்முடைய பாதுகாப்பிற்காக எல்லையில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றுவோம் என்று தனது ட்விட்டரில் தெரிவித்தார். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்கு வெறும் வார்த்தைகள் மூலமாக நம்முடைய நன்றி உணர்வை வெளிப்படுத்திவிட இயலாது என்றும் அதில் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil