ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு கறுப்பு ஆடை அணிந்து வந்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லி விஜய் சவுக்கில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அதானி மீதான புகார்களின் மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் பயப்படுகிறார்” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது, “ஜனநாயகத்தின் கறுப்பு தினம்” என்றார்.
மேலும், ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது அதானி விவகாரம் குறித்து கேள்வியெழுப்பினார் எனத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்க குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15ஆயிரம் அபராதம் விதித்தது.
இதையடுத்து அவர் வயநாடு எம்.பி. பதவியை இழந்தார். இன்று நடைபெற்ற காங்கிரஸின் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“