இந்தியா – இலங்கை நட்புறவு குறித்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி, இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே-வுடன் இன்று காணொளிக்காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா – இலங்கை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் தனது உரையில், " இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றி, இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால மற்றும் பன்தன்மையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்புவதாக கூறினார்.
"உங்கள் தேர்தல் வெற்றிக்குப் பின், இந்தியா-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பு வந்துவிட்டது. இருதரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவுப்படுத்த மக்களிடையே புதிய நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளது,”என்று மோடி கூறினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி , மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சே ஆகஸ்ட் 9ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையுடனான தனது உறவுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று மோடி கூறினார்.
அண்டை நாட்டுத் தலைவர்களோடு பிரதமர் மோடியின் முதல் மெய்நிகர் உச்சி மாநாடு இதுவாகும். ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, பிரதமராக பதவியேற்ற பின்னர், தனது முதல் இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.
ஒட்டுமொத்த பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் மற்றும் பல முக்கிய துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக அறியப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil