நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை, சந்திராயன் 2 விண்கல திட்டம் தனக்கு கற்றுக்கொடுத்ததாக பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலம், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் உரையாற்றி வருகிறார். 55 வது வாரமாக இன்று (ஜூலை 28ம் தேதி) உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, பண்டிகை காலங்களில் நடக்கும் விழாக்கள் மூலம், தண்ணீர் சேகரிப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் முதல்முறையாக, தண்ணீர் கொள்கையை மேகாலாயா அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக மேகாலயா அரசிற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அரியானாவில், குறைந்த நீரை பயன்படுத்தப்படும் பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு இழப்பு குறைகிறது.
தற்போது பண்டிகை காலம். இந்த காலகட்டத்தில், பல விழாக்கள் நடக்கும். இதனை நாம் தண்ணீர் சேமிப்பு குறித்த செய்தியை அனைவருக்கும் அனுப்ப ஏன் பயன்படுத்தக்கூடாது? இந்த விழாக்களின் போது, தண்ணீர் சேமிப்பு குறித்து, தெரு நாடகங்கள் உட்பட பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
விண்வெளி துறையில், 2019ம் ஆண்டு இந்தியாவிற்கு பலன் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். இந்த விண்கலம், இந்தியர்களின் மனதில் நிறைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலம். நிலவில் இந்த விண்கலம் தரையிறங்குவதை பார்க்க காத்திருக்கிறோம்.இந்த விண்கலம் நமக்கு பல வகைகளில் சிறப்பானது. சந்திராயன் 2 விண்கலம் மூலம், நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை நான் கற்று கொண்டுள்ளேன். நமது திறமை மற்றும் தகுதி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தியாவின் விண்வெளி திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த வினாடி வினா போட்டியில் பங்கேற்க வேண்டும் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும்உதவி வழங்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும் என உறுதி அளிக்கிறேன். என்று பிரதமர் மோடி பேசினார்.
பா,ஜ.,தலைவர் நட்டா பாராட்டு : பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காவும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், இந்த நிகழ்ச்சியை, தொடர்ந்து 55வது வாரமாக நிகழ்த்தியுள்ளார். இதற்காக, அவர் 40 மணிநேரங்களை செலவிட்டுள்ளார். அரசியல் கலப்பு சிறிதும் இல்லாமல், நாட்டின் முன்னேற்றத்தை மட்டுமே மையக்கருவாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக, பிரதமர் மோடிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா கூறியுள்ளார்.