இந்திய - சீன நாடுகளுக்கிடையே எல்லை விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி, லடாக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த மே மாதத்தில், எல்லைப்பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பிரதமர் அங்கு ஆய்வு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று(ஜூலை 3) லே பகுதிக்கு சென்று, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார். பிரதமருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது.. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன், கடினமான நிலப்பகுதியை கொண்டது. அங்கு, ராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். லடாக் சென்ற பிரதமர் மோடியுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். இந்திய பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு குறித்து பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.
தொடர்ந்து, சீன வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ள லடாக்கின் நிமு பகுதி, கடல்மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி மேலே உள்ளது. இந்த பகுதி, இந்துஸ் நதி, ஜன்ஸ்கார் மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.
கடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில் இந்த மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது, இந்திய பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற எதிரி நாட்டு படைகளை, இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து வெளியேற்றியுள்ளனர். இந்திய வீரர்களின் உணர்வை இந்தியா மதிக்கிறது, போற்றுகிறது. இந்திய வீரர்கள் தாய்நாட்டை காப்பதில் தங்களது இன்னுயிரை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நாராவணே உடன் இன்று ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், ஜூலை 2ம் தேதி இந்த பயணம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது.
ராணுவ தளபதி நாராவணே, 3வது முறையாக லடாக் பகுதிக்கு வந்துள்ளார். முதல் பயணத்தின்போது லே பகுதியில் உள்ள வீரர்கள் தலைமையகத்திலும், இரண்டாவது பயணத்தில், காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் அவர் சென்றிருந்தார்.
லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், எல்லை விவகாரம் தொடர்பாக சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுவரை ஜூன் 6, 22 மற்றும் 30ம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தன. முதல் 2 பேச்சுவார்த்தை சீனப்பகுதியில் உள்ள மோல்டோவிலும், 3வது பேச்சுவார்த்தை லடாக்கில் உள்ள சுசுல் பகுதியிலும் நடைபெற்றிருந்தது.
இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை தங்களுக்கே சொந்தம் என்று கூறியுள்ள சீனா, அந்தப்பகுதியில் தொடர்ந்து :ஊடுருவி வந்த நிலையிலேயே, இருநாட்டு படடையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் பலியாயினர். சீனதரப்பிலும் அதிகளவில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்திய - சீன எல்லைப்பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கி வரும்நிலையில், இந்தியாவும் தங்கள் படைகளை அங்கு குவித்து பாதுகாப்பை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - PM Modi visits Leh to take stock of India-China border situation
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.