நாவல் கொரோனா வைரசின் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 22ம் தேதி அனுசரிக்கப்பட்ட சுய ஊரடங்கு நிகழ்வின் போது அத்தியாவசிய தேவைகளான பலசரக்கு கடைகள், மருந்துக்கடைகள், ஏடிஎம்கள் உள்ளிட்டவைகள் செய்ல்பட்டதை போன்று, இந்த 21 நாட்கள் ஊரடங்கின் போதும் அத்தியாவசிய தேவைகள் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அத்தியாவசிய தேவைகள், மருந்துகள் உள்ளிட்டவைகள் இந்த ஊரடங்கு நிகழ்வின் போதும் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கோவிட் -19 தொற்று தடுப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ரேசன் கடைகள், உணவு விற்பனை செய்யும் கடைகள் பலசரக்கு கடைகள், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள், பால் மற்றும் பால் விற்பனை மையங்கள், மீன் மற்றும் இறைச்சி கடைகள், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் விற்பனை கடைகள் உள்ளிட்டவைகள் திறந்திருக்கும். மாவட்ட நிர்வாகங்கள், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை, அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகள், மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள், மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், பொது மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள், மருந்தங்கள், டாக்டர்கள், மருத்துவ உபகரண விற்பனை நிலையங்கள், கிளினிக்குகள், ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்டவைகள் தங்குதடையின்றி இயங்கும். மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள், மருத்துவ சேவை பணியாளர்களின் போக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதி.
வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், ஏடிஎம்கள் உள்ளிட்டவைகள் இயங்கும்
அச்சு மற்றும் மின்னனணு ஊடகங்கள் செயல்படும்
நாடு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு ஏதுவாக தொலைதொடர்பு, இன்டர்நெட் சேவைகள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை
அத்தியாவசிய தேவைகளான உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் இணையதள வர்த்தகம் மூலம் வீட்டுக்கே டெலிவரி செய்ய நடவடிக்கை
பெட்ரோல் பங்க்குகள், சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் மொத்தம் மற்றும் சில்லைர விற்பனை நிலையங்கள் செயல்படும்.
மின் விநியோகம் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதிமீறல்களுக்கு அபராதம்
இந்தியா அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவின் மூலம் தனிமை என்ற பெயரில் முடக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும், அபராதமும் விதிக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது 2005ம் ஆண்டின் பேரிடர் நிர்வாக சட்டத்தின் பிரிவுகள் 51 முதல் 60 வரையிலும், இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் விதிமுறைகளை வகுத்துள்ளது.
அந்தந்த மாவட்ட நீதிபதிகள், நிகழ்விடங்களின் கமாண்டர்களாக செயல்பட்டு விதிகளை மீறுபவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்குவர். மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பர்.
பாதுகாப்பு, மத்திய ஆயுதப்படை போலீசார், வருவாய்த்துறை, பொதுத்துறை சேவைகள், பேரிடர் மேலாண்மை, மின் உற்பத்தி, அஞ்சல் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை தவிர்த்த மத்திய மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.
சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மாநில அரசின் துறைகள், குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும்.
உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்காது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மாநில அரசின் அனுமதியை பெற்று இயங்க நடவடிக்கை.
பொதுமக்கள் போக்குவரத்து சேவைகளான ரயில், சாலை மார்க்கம் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறை, சட்டம், உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருக்கும். மக்கள் கூட்டமாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. திருமணம் இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க