நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு முறை கூட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதில்லை. இன்னும் 4 மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளரை மட்டும் அழைத்து இன்று பேட்டி அளித்திருக்கிறார். அப்போது, பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
அவர் கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் எதிர்க் கட்சிகளின் கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும். நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில் எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ, விடியலுக்குள் அனைத்து வீரர்களும் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தேன்.
ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். அவர் சொந்த காரணங்களுக்காகவே பதவி விலகினார்.
நாங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் செய்வதற்கு ஓராண்டு முன்னரே, யாராவது கருப்புப் பணம் வைத்திருந்தால் அதை இப்போதே முறையாக ஒப்படைத்து விடுங்கள், விளைவுகளிலிருந்து தப்புவீர்கள் என்று எச்சரித்தோம். கருப்புப் பணத்தைப் பதுக்கியிருந்த பலர், மோடியும் மற்றவர்கள் போல சொன்னதைச் செய்யமாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால், நடந்தது வேறு. ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர்" என தெரிவித்துள்ளார்.