அதிகமான மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. மக்களை ஒருங்கிணைப்பதற்காக மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலரின் சுயநலம் காரணமாக, நமது நாட்டைப் பிரிக்கும் காரணியாக மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன
இதைத் தடுக்க எளிய தீர்வு உண்டு. நாளொன்றுக்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தையை, 10 முதல் 12 வேறு இந்திய மொழிகளில் பத்திரிகைகள் வெளியிட்டால், ஓராண்டில் 300க்கும் அதிகமான வார்த்தைகளுக்குப் பல்வேறு மொழிகளில் அதன் பயன்பாட்டை மக்கள் அறிந்துகொள்வர். மற்ற மொழிகளைப் பற்றி மக்கள் அறிந்துகொண்டால், அந்த மொழிகளுக்கும் அவர்களது தாய்மொழிக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து அவர்கள் எளிதில் புரிந்துகொள்வர். இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வு பெருகும் என்று நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
சசி தரூர் வரவேற்பு: பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வரவேற்பு தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், தினமும் ஒரு வார்த்தையை மற்ற இந்திய மொழிகளில் அறிந்துகொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஹிந்தி மொழியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மற்ற மொழிகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையிலான அவரது பேச்சை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.