நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இன்று செவ்வாய் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமரின் உரை…
கொரோனா இரண்டாவது அலை ஒரு புயலைப்போல் நாடு முழுவதும் வீசி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒருபோதும் இழந்து விட வேண்டாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் உங்களோடு துணையாய் நிற்கிறேன். கடினமான சூழ்நிலைகளில் நமது உறுதியை இழந்து விட வேண்டாம். இந்த இரண்டாவது அலையையும் இந்தியா வெற்றிக்கொள்ளும்.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுவரை 12 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. தடுப்பூசி உற்பத்தியில் 50% மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இன்று உலகிலேயே விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கிறது.
ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை இணைந்து ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எளிதாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய வணக்கம். மாஸ்க் முதல் வெண்டிலேட்டர் வரை மருத்துவ உபகரணங்களை தயாரித்து சாதனை புரிந்துள்ளோம்.
புலம் பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள இடங்களிலே இருக்க வைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.
கொரோனாவுக்கு எதிரான போரில் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும். நாம் தைரியத்துடன் போராட வேண்டும். அவசியமற்ற வேலைகளுக்கு வெளியே செல்லாமல், வீட்டிலிருந்தே வேலை செய்ய முன் வர வேண்டும். அனைத்து மக்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் குழுக்கள் அமைத்து கொரோனாவை தடுக்க வேண்டும். விழாக்காலங்களில் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகரிப்பதன் மூலமாக முழு முடக்கத்தை தவிர்க்கலாம். பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே. பொது முடக்கம் என்பதை மாநில அரசுகள் கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil