New Update
00:00
/ 00:00
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி "உலகிற்கு பொய் சொல்கிறார்", மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓ.பி.சி) பிறக்கவில்லை, ஏனெனில் மோடி 2000 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது ஓ.பி.சி அந்தஸ்து வழங்கப்பட்ட தெலி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘PM Modi lying…was not born as OBC’: As Odisha leg of Bharat Jodo Nyay Yatra ends, Rahul Gandhi brings up caste census
"உங்கள் பிரதமர் ஓ.பி.சி.,யாகப் பிறக்கவில்லை, பொது ஜாதியில் பிறந்தவர், ஓ.பி.சி.,யாகப் பிறந்ததாக உலகம் முழுவதும் பொய் சொல்கிறார்" என்று பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் ஒடிசா பேரணியில் ராகுல் காந்தி கூறினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தை நோக்கி யாத்திரை செல்ல உள்ளது.
“முதலில், நரேந்திர மோடிஜி ஓ.பி.சி.,யாகப் பிறக்கவில்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். கேளுங்கள், நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள். நரேந்திர மோடி ஜி தெலி இனத்தில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் அவரது சமூகம் பா.ஜ.க.,வால் ஓ.பி.சி அந்தஸ்தைப் பெற்றது” என்று ராகுல் காந்தி கூறினார். “இதை நான் எப்படி தெரிந்துகொண்டேன் தெரியுமா? அதற்கு எனக்கு பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை. ஏனென்றால் அவர் எந்த ஓ.பி.சி.,யையும் கட்டிப்பிடிக்கவில்லை அல்லது விவசாயிகள் அல்லது தொழிலாளர்களின் கைகளைப் பிடிக்கவில்லை. அவர் அதானியின் கைகளை மட்டுமே பிடித்துள்ளார்” என்று ராகுல் காந்தி கூறினார்.
பா.ஜ.க.,வின் இந்துத்துவா பிரச்சாரத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைக்க முடிவு செய்த நிலையில், காங்கிரஸ் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று ராகுல் காந்தி கூறினார். “அவர் [பிரதமர் மோடி] ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டார். வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார். ஏனென்றால் உங்கள் பிரதமர் உலகிற்கு பொய் சொல்கிறார். அவர் ஓ.பி.சி அல்ல, பொது சாதியைச் சேர்ந்தவர், ஜாதி வாரிக் கணக்கெடுப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். காங்கிரஸும், ராகுல் காந்தியும் மட்டுமே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவார்கள்,'' என்று ராகுல் காந்தி கூறினார்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரை வியாழன் பிற்பகலில் இருந்து இடைநிறுத்தப்பட்டு பிப்ரவரி 11 அன்று சத்தீஸ்கரின் ராய்கரில் மீண்டும் தொடங்கும். “யாத்திரை 14 ஆம் தேதி காலை மீண்டும் ஜார்கண்டிற்குள் நுழையும், அதன் பிறகு 15 ஆம் தேதி காலை பீகாரில் மீண்டும் நுழையும். பிப்ரவரி 16 ஆம் தேதி பிற்பகலில், பாரத் ஜோடோ நியாய யாத்ரா உத்தரபிரதேசத்திற்குள் நுழையும்,” என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் X தளத்தில் பதிவிட்டுள்ளார்,
மணிப்பூரில் தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்திரை 66 நாட்களில் 15 மாநிலங்கள் வழியாக 6,700 கி.மீ பயணித்து மும்பையில் நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.