பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், மூத்த அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'பா.ஜ.க. எம்.பி.-க்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை பா.ஜ.க. எம்.பி.க்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கபடி, கோ கோ உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வரும் 2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபைஅறிவித்துள்ளது. நமது நாட்டின் 85% குறு, சிறு விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சிறுதானியங்களில் அதிக ஊட்டச் சத்துகள் உள்ளன.
பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் சிறுதானியங்களை ஊக்குவிக்க வேண்டும். எம்.பி.க்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்களில் சிறுதானிய உணவு வகைகளைப் பரிமாற வேண்டும். அங்கன்வாடி, பள்ளிகள், வீடுகள், அரசு அலுவலகங்களில் சிறுதானிய உணவு வகைகளை பரிமாற ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் குறு, சிறு விவசாயிகள் பலன் அடைவார்கள். மக்களின் உடல்நலனும் மேம்படும்.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி அடுத்த ஓராண்டுக்கு நாடு முழுவதும் மாநாடு, கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் சிறுதானிய உணவு வகைகள் இடம்பெறும்.
பாஜக சார்பில் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். இந்த விளையாட்டுப் போட்டிகளில் கபடி, கோ கோ உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவரவர் தொகுதிகளில் இந்திய விளையாட்டுகளை ஊக்குவிக்க பாஜக எம்.பி.க்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதுதவிர, சிறுதானியங்களில் முறையான முத்திரை இருக்க வேண்டும் என்றும், நாடு தனது சந்தையை பல்வகைப்படுத்துவதை இலக்காகக் கொள்ளலாம் என்றும் மோடி கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத்தொடரான நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜி20 கூட்டத்தொடர் குறித்து விளக்கமளித்தார்.
இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் அரசுக்கு "அதிக பங்குகள்" இருப்பதாகவும், நாடு முழுவதும் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "இளைஞர்களின் நினைவில் பொறிக்கப்படும் நிகழ்வாக இதை உருவாக்க அரசு விரும்புகிறது" என்றும் ஒரு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.