பிரதமர் நரேந்திர மோடி, தனது மான் கி பாத் (மனதின் குரல்) வானொலி உரையில், அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர், நாட்டில் ஒற்றுமை உணர்வை மேலும் உயர்த்தியதற்காக நாட்டிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தார். மேலும், ராமர் கோயில் மீதான தீர்ப்பை நாடு முழு மனதுடன் வரவேற்றதாகவும் கூறினார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தேசிய மாணவர் படையான என்.சி.சி தினத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்த என்.சி.சி மாணவர்களுடன் பேசினார்.
பிரதமர் மோடி இந்த மாத மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது: “நான் என்.சி.சி முகாமில் இருந்தபோது ஒரு மரத்தில் ஏறினேன். நான் விதிகளை மீறிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால், மரத்தில் ஒரு சிறிய பறவை சிக்கி இருந்தது அனைவருக்கும் தெரியும். எனக்கு தண்டனை கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால், எனது செயலுக்கு நான் பாராட்டப்பட்டேன்.
டிசம்பர் 7 ஆயுதப்படை கொடி நாளாக கொண்டாடப்படுவதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இந்த நாளில் நமது வீரர்கள் அனைவரையும் நாம் நினைவில் கொள்கிறோம். எல்லோரும் முன்வந்து அந்த நாளில் பங்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய ஆயுதப்படை விரர்களின் வீரம் மற்றும் துணிச்சலைப் போற்றுவோம்.
பள்ளிகளில், சி.பி.எஸ்.இ ஃபிட் இந்தியா வாரத்தில் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டுள்ளது. மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஃபிட் இந்தியா வாரத்தில் பங்கேற்கலாம். அனைத்து பள்ளிகளும் ஃபிட் இந்தியா தரவரிசையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
புஷ்கரம் விழா கும்ப மேலாவைப் போல தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. 'ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத் தரிசனம்' ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ஆண்டு இது பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் நடைபெற்றது. வரும் ஆண்டில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா ஆற்றின் கரையில் நடைபெறும்.
நம்முடைய சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாததாக மாற்ற நாம் தீர்மானித்தால், ‘பிளாஸ்டிக் இல்லாத இந்தியா’ முழு உலகிற்கும் ஒரு புதிய முன்மாதிரியாக அமையும்.” என்று கூறினார்.
மான் கி பாத் உரையில், அயோத்தி தீர்ப்புக்கு பிறகான சூழலைப் பற்றி பேசிய பிரதமர் மோடி, “தீர்ப்பு குறித்து சத்தமாக பேசும் சிலர் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இது ஐந்து முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்தது. ஆனால், அது ஒற்றுமையை வளர்த்த ஒரு நாளாக மாறியது. இந்திய மக்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், துறவிகள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து மதங்களின் தலைவர்களுக்கும் நன்றி.” என்று கூறினார். மேலும், ராமர் கோயில் மீதான தீர்ப்பை நாடு முழு மனதுடன் வரவேற்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.