பள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய பிரதமர் நரேந்திர மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
இந்த புத்தகம் 193 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில், தேர்வு காலத்தில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய மந்திரங்களாக மோடி பலவற்றை குறிப்பிட்டுள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். அதற்கான சில உதாரணங்களையும் அவர் விளக்கினார்.
‘விடைத்தாள் ஒன்-வே டிக்கெட்’, அதாவது “விடைத்தாளில் விடைகளை எழுதியவுடன், அவை சரியோ, தவறோ அதுகுறித்து கவலை கொள்ளவோ, விடைகளை மாற்றியமைக்கவோ வேண்டாம்”, என மோடி அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக சுஷ்மா கூறினார்.
மேலும், தேர்வுக்கு தயாராகும்போது இடையே ஓய்வெடுக்க வேண்டும் எனவும், மன அழுத்தத்தை போக்க சிரிக்க வேண்டும் எனவும் அப்புத்தகத்தில் பிரதமர் மோடி மாணவர்களுக்கு கூறியுள்ளார்.
’மான் கி பாத்’ நிகழ்ச்சி குறித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் கருத்துகளும் அப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட செய்யவேண்டிய யோகாக்கள் என 40 பக்கங்களுக்கு ஆசனங்களும் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில:
- உங்களை சோதனை செய்ய தேர்வு அல்ல, உங்களின் தற்போதைய நிலையை தேர்வு செய்யவே.
- போர்வீரராக இருங்கள், கவலைப்படுபவர்களாக இருக்காதீர்கள்.
- இந்த நிமிடத்தை அனுபவியுங்கள்.
- மறுபடியும் மறுபடியும் படித்து விவேகம் அடையுங்கள்.