PM Modi meets Nobel laureate Abhijit Banerjee: பொருளாதாரத்தில் நோபல் பரிசைப் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜியை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்தார். மனித ஆற்றலை மேம்படுத்துவது மீதான அபிஜித் பானர்ஜியின் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், அபிஜித் பானர்ஜியை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் மிகச் சிறந்த சந்திப்பு நடந்தது. மனித ஆற்றலை மேம்படுத்துவது மீதான அவரது ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. பல்வேறு விஷயங்களில் ஆரோக்கியமான, விரிவான உரையாடல் நடந்தது. அவரது சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு அவருக்கு மிகச் சிறந்த வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வறுமை ஒழிப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவிக்கையில், அபிஜித் ஒரு இந்தியராக பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றது பெருமிதம் இருந்தாலும், அவருடைய கருத்துகளுடன் தான் உடன்படவில்லை என்றும் காரணம் அவருடைய சிந்தனை முற்றிலும் இடதுசாரி சார்ந்தது. இந்திய மக்கள் அவருடைய சிந்தனையை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.
பியூஷ் கோயலின் கருத்து குறித்து பானர்ஜி கூறுகையில், அமைச்சர் தன்னுடைய தொழில்முறை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தான் தன்னுடைய பொருளாதார சிந்தனையில் பாகுபாடு இல்லை என்றும் கூறினார். “என்னுடைய தொழில்முறை அல்லது எங்களுடைய தொழில்முறையை கேள்வி எழுப்புகிற இந்த வகையான கருத்துகள் உதவாது என்று கருதுகிறேன். இந்த பரிசு எங்களுக்கு வழங்கப்பட்டதற்கான காரணம், நாங்கள் தொழில் வல்லுநர்கள் என்பதால் தான்” என்று என்.டி. டிவிக்கு அளித்த பேட்டியில் அபிஜித் பானர்ஜி கூறினார்.
அபிஜித் பானர்ஜி காங்கிரஸுக்கு மக்களவைத் தேர்தலுக்காக அதனுடைய நியாய் திட்டம் பற்றி ஆலோசனை வழங்கினார். இதே பொருளாதார தரவுகளை தன்னிடம் பாஜக கேட்டிருந்தாலும் வழங்கியிருப்பேன் என்று அவர் கூறினார். “நான் தனிப்பட்ட முறையில் பல்வெறு விஷயங்களைப் பற்றி பாக்பாடுடன் இருக்கலாம். ஆனால், பொருளாதாரத்தின் அடிப்படையில் நான் ஒரு பக்கச்சார்பும் இல்லாதவன். இதை மக்கள் அக்கறையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது என்னிடம் ஒரு கேள்வி கேட்டால், நான் அவர்களின் நோக்கங்களைக் கேள்வி கேட்கமாடேன்” என்று பாஜகவின் விமர்சனங்கள் பற்றி அபிஜித் பானர்ஜி விளக்கம் கூறினார்.