பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அரசு முறை பயணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) அமெரிக்கா சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமரை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் ஆகியோர் வரவேற்றனர்.
“நியூயார்க் நகருக்கு வந்தடைந்தேன். சிந்தனைத் தலைவர்களுடனான உரையாடல் மற்றும் நாளை ஜூன் 21 ஆம் தேதி யோகா தின நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இங்கு எதிர்பார்க்கிறோம்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஜோ பைடனுடன் 3 சந்திப்புகள்; பாதுகாப்பு துறையில் நெருக்கமான உறவு
அமெரிக்கா வந்தவுடன், பிரதமர் மோடி ட்விட்டர் உரிமையாளரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலன் மஸ்க்கை சந்தித்தார். அடுத்தப்படியாக நோபல் பரிசு வென்ற பால் ரோமர் மற்றும் வானியல் இயற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன் போன்ற பிற முக்கிய நபர்களையும் பிரதமர் சந்தித்தார். மேலும், சுகாதார மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும் பிரதமர் சந்தித்து உரையாற்றினார்.
பிரதமரைச் சந்தித்த பிறகு, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ட்விட்டர் தலைவரான எலன் மஸ்க், பிரதமர் மோடியுடனான உரையாடல் சிறப்பானதாக இருந்தது என்று கூறினார். மேலும் மற்ற பெரிய நாடுகளை விட இந்தியா அதிக வாக்குறுதிகளைக் கொண்டுள்ளது என்றும் எலன் மஸ்க் கூறினார்.
டெஸ்லா இந்திய சந்தையில் நுழையுமா என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக எலன் மஸ்க் கூறினார். "டெஸ்லா இந்தியாவில் இருக்கும் மற்றும் மனித சக்தியால் முடிந்தவரை கூடிய விரைவில் அதைச் செய்வோம் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி இந்திய அரசுக்கு எதிராக சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து எலன் மஸ்க்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, டுவிட்டருக்கு உள்ளூர் அரசாங்கத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
எந்தவொரு நாட்டிலும் உள்ள சட்டங்களைப் பின்பற்றுவதே நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், "அதற்கு மேல் நாம் செய்ய முடியாது" என்று எலன் மஸ்க் கூறினார்.
வெவ்வேறு வகையான அரசாங்கங்களுக்கு வெவ்வேறு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன, மேலும் "சட்டத்தின் கீழ் சாத்தியமான பேச்சு சுதந்திரத்தை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று எலன் மஸ்க் கூறினார்.
சந்திப்புக்குப் பின்னர், ”இன்று உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எலன் மஸ்க்! ஆற்றல் முதல் ஆன்மீகம் வரையிலான பிரச்சனைகளில் நாங்கள் பலதரப்பட்ட உரையாடல்களைக் கொண்டிருந்தோம்,” பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைவர் எலன் மஸ்க் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் புகைப்படங்களை வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்து, இருவரும் வணிகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாடியதாக குறிப்பிட்டுள்ளது. 'மீண்டும் சந்திப்பது மரியாதையாக இருந்தது' என்ற எலன் மஸ்க்கின் கருத்தை மேற்கோள் காட்டி, சந்திப்பின் புகைப்படத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
"பிரதமர் மோடி புகழ்பெற்ற தொழிலதிபரும் முதலீட்டாளருமான எலன் மஸ்க்கைச் சந்தித்தார். பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் மாற்றுவதற்கான அவரது முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டினார். மின்சார இயக்கம் மற்றும் வேகமாக விரிவடையும் வணிக விண்வெளித் துறையில் முதலீடு செய்வதற்கு இந்தியாவில் வாய்ப்புகளை ஆராய அவரை அழைத்தார்," என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil