Pm Modi | Electoral Bonds | Enforcement Directorate: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவு போட்டது.
இந்த உத்தரவின்படி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. இதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தமாக 22,217 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. அதில் பா.ஜ.க ரூ.8,451 கோடியும், காங்கிரஸ் ரூ.1,950 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,707.81 கோடியும் மற்றும் பி.ஆர்.எஸ் ரூ.1,407.30 கோடியும் பணமாக்கியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ED should work independently, we don’t direct its actions: PM Modi on action against opposition leaders
மோடி கருத்து
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, அது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து தனக்கு எந்தவொரு பின்னடைவை ஏற்படுத்தவில்லை என்றும், தனது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட திட்டத்தால்தான் பணம் யார் கொடுத்தது, யார் வாங்கினார்கள் என்பவை எல்லாம் பொதுவெளியில் வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தந்தி டிவி பிரதமர் மோடி அளித்த பேட்டியில், "எனக்கு பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் என்று கொஞ்சம் சொல்லுங்கள்?. இன்று மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நாளை வருத்தப்படுவார்கள். இந்த நிபுணர்களிடம் நான் கேட்க விரும்புவது, 2014-க்கு முன் எத்தனை தேர்தல்கள் நடத்தப்பட்டன? அந்தத் தேர்தல்களில் செலவுகள் இருந்திருக்க வேண்டும், இல்லையா? அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று எந்த அமைப்பாலும் சொல்ல முடியுமா?.
இன்று மோடி தேர்தல் பத்திரங்களை உருவாக்கி உள்ளார்; அதனால்தான் உங்களால் அதைப்பற்றி தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது, யார் வாங்கினார்கள் என்பதையெல்லாம் உங்களால் அறிய முடிகிறது. இல்லையென்றால் யாருக்கு பணம் எங்கிருந்து வந்தது என தெரியாது. இதற்கு முன்பும் தேர்தல்கள் நடந்தன. இன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த விவரங்கள் உங்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் சில குறைகள் இருக்கலாம். ஆனால் இந்த குறைபாடுகளை சரிசெய்ய முடியும்." என்று அவர் கூறினார்.
மத்திய விசாரணை அமைப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "அமலாக்கத்துறை எங்களால் உருவாக்கப்பட்டதா?, பண மோசடி தடுப்பு சட்டம் நாங்கள் கொண்டுவந்ததா? இல்லை. அமலாக்கத்துறை என்ன வேலை செய்கிறது?. அது ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக பணியாற்றுகிறது. நாங்கள் அதனை தடுப்பதும் இல்லை; அதனை அனுப்புவதும் இல்லை. அது சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். நீதித்துறையின் தராசுகளால் அது மதிப்பிடப்படும். அதோடு எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இப்போது அமலாக்கத்துறையிடம் சுமார் 7 ஆயிரம் வழக்குகள் உள்ளன. அதில் அரசியல்வாதிகளோடு தொடர்புடைய வழக்குகள் 3 சதவீதத்துக்கும் குறைவானவை. அவர்களின் (எதிர்க்கட்சி) 10 ஆண்டுகால ஆட்சியில், அவர்கள் கைப்பற்றிய பணம் ரூ.35 லட்சம் மட்டுமே, நாங்கள் ரூ.2,200 கோடியை கைப்பற்றியுள்ளோம்.
இந்த விவகாரத்தில் கட்சியைப் பொருட்படுத்தாமல், செயல்பட்டு வருகிறோம். அமலாக்கத்துறை எந்த வழக்கையும் சொந்தமாகத் தொடங்க முடியாது; பல்வேறு துறைகள் முதலில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும், பிறகு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. பண மோசடி தடுப்பு சட்டம் முன்பு இருந்தே உள்ளது, ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. பண மோசடி தடுப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க 150-க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன, மேலும் ஒரு அதிகாரியை நீக்க அல்லது பணியில் அமர்த்த உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றனர். ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகள் நின்றுவிடாது என்று தெரிந்ததால், நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். நீதிமன்றங்கள் மூலம் இந்த அமைப்புகளை தடுத்து நிறுத்தலாம் என்று நினைக்கிறார்கள்." என்று அவர் கூறினார்.
வாரிசு அரசியல் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், "ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்தால், நான் அதனை வாரிசு அரசியல் என ஒருபோதும் சொல்லவில்லை. அதிக அளவில் மக்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு குடும்பத்தில் இருந்து 10 பேர் கூட அரசியலுக்கு வந்தாலும் நான் அதை கெடுதல் என சொல்லவில்லை.
ஆனால், ஒரு அரசியல் கட்சியையே ஒரு குடும்பம் நடத்தும்போது, அந்த குடும்பம் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுக்கும்போது, கட்சியில் அடுத்த தலைமுறை அந்த குடும்பத்தில் இருந்தே வரும்போது, அது ஒரு குடும்ப அரசியல் கட்சி. இதில் ஜனநாயகம் இல்லை. இதனால் அந்த கட்சியில் எத்தனை அறிவாளிகள், திறமையுள்ளவர்கள் இருந்தாலும் அவர்கள் மேலே வருவதில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாட்டின் முடிவு நாட்டின் இளைஞர்களால் எடுக்கப்படும். நாட்டின் கிராமங்களால், நாட்டின் விவசாயிகளால் எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அது குடும்ப அரசியலில் நடப்பதில்லை." என்று கூறினார்.
தி.மு.க.வுக்கான அவரது செய்தி குறித்து கேட்டதற்கு, பிரதமர் மோடி, “அவர்களுக்கு என்னுடைய செய்தி எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன். தமிழக மக்களே அவர்களுக்கு ஒரு கடுமையான செய்தியை சொல்லப்போகிறார்கள்." என்று கூறினார்.
400 இடங்கள் என்பது தான் நிர்ணயித்த லட்சிய இலக்கு அல்ல என்றும் மக்களின் விருப்பம் என்றும் மோடி கூறினார். ஆனால் தமிழகத்தில் தேர்தல் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். “முதலில் தமிழகத்திற்கு நான் செய்யும் அனைத்தும் தேர்தல் நோக்கத்திற்காகத் என்று கூறாதீர்கள். அவர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மொழியின் மீது மிகுந்த மரியாதையுடன் நான் மாநிலத்தைப் பார்க்கிறேன், ”என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.