PM Narendra Modi's mother Heeraben Modi passes away Tamil News: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் கொண்ட மும்மூர்த்திகளை நான் எப்போதும் உணர்ந்தேன்.
100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் டெல்லியில் இருந்து அகமதாபாத் சென்றடைந்த பிரதமர் மோடி, தனது தாயை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றார். மேலும், நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று இம்மண்ணை விட்டு மறைந்துள்ளார்.
கடந்த 1923ல் பிறந்த ஹீராபென், (100), சோமாபாய், அம்ரித்பாய், நரேந்திரன், பிரஹலாத் மற்றும் பங்கஜ் ஆகிய ஐந்து மகன்களையும் வசந்திபென் என்ற ஒரு மகளையும் பெற்றுள்ளார். அவர் மெஹ்சானா மாவட்டத்தின் விஸ்நகரில் பிறந்தார் மற்றும் அவர் குழந்தையாக இருந்தபோது ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயால் தனது தாயை இழந்தார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களுடன் கழித்தார் மற்றும் படிப்பறிவற்றவராக இருந்தார். பிரதமர் மோடியின் சொந்த இடமான வாட்நகர் அருகே விஸ்நகர் உள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத், எம்.கே.ஸ்டாலின் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், கௌதம் அதானி போன்ற தொழில் அதிபர்கள் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil