‘Some pessimists are steeped in frustration’: Top quotes from PM Modi’s address in Lok Sabha, ‘சில அவநம்பிக்கையாளர்கள் விரக்தியில் மூழ்கியுள்ளனர்’: மோடியின் மக்களவை உரை ஹைலைட்ஸ் | Indian Express Tamil

‘சில அவநம்பிக்கையாளர்கள் விரக்தியில் மூழ்கியுள்ளனர்’: மோடியின் மக்களவை உரை ஹைலைட்ஸ்

உலகமே பொருளாதார சவால்களையும், போரையும் கண்டபோது, இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது பெருமைக்குரியது – மக்களவையில் பிரதமர் மோடி உரை

‘சில அவநம்பிக்கையாளர்கள் விரக்தியில் மூழ்கியுள்ளனர்’: மோடியின் மக்களவை உரை ஹைலைட்ஸ்
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது. (ஆதாரம்: சன்சத் டிவி/ யூடியூப்)

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மக்களவையில் உரையாற்றி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் மூன்று நாட்கள் இடையூறுகளுக்குப் பிறகு, பா.ஜ.க உறுப்பினர் சந்திரபிரகாஷ் ஜோஷி முன்வைத்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தி.மு.க எம்.பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் உரையாற்றினர்.

இதையும் படியுங்கள்: 9 ஆண்டுகளில் 18 கோடி வேலைவாய்ப்பு எங்கே? ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பிய கார்கே

மக்களவையில் விவாதத்திற்கு 12 மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

மக்களவையில் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ:

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையை “தொலைநோக்கு பார்வை” என்று மோடி கூறினார், “ஜனாதிபதி எங்களையும் கோடிக்கணக்கான இந்தியர்களையும் வழிநடத்தினார். குடியரசின் தலைவராக அவரது இருப்பு வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிக்கிறது.”

குடியரசுத் தலைவர் “பழங்குடியின சமூகத்தின் பெருமையை” உயர்த்தியுள்ளார் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், “இன்று, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்குடி சமூகத்தில் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசமும், நாடாளுமன்றமும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது,” என்றும் மோடி கூறினார்.

குடியரசுத் தலைவரின் உரையை யாரும் விமர்சிக்கவில்லை என்றும், கொள்கை முடக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருவது குறித்த அவரது கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்காகவும் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயைக் கையாண்ட விதம் மக்களிடையே மிகுந்த தன்னம்பிக்கையையும் பெருமையையும் விதைத்துள்ளது என்று மோடி கூறினார். 140 கோடி இந்தியர்கள் சவாலை எதிர்கொண்டனர், தொற்றுநோய்களின் போது 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதாக அவர் கூறினார்.

உலகமே பொருளாதார சவால்களையும், போரையும் கண்டபோது, ​​இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது பெருமைக்குரியது என்று மோடி கூறினார். “நாம் ஜி20 மாநாட்டை நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம், ஆனால் இதைப் பற்றி மகிழ்ச்சியடையாத சிலர் உள்ளனர்,” என்று கூறி, எதிர்க்கட்சிகளின் சலசலப்பை மோடி அழைத்தார். மேலும், இந்தியாவைப் பற்றி உலகில் நேர்மறை, உறுதி மற்றும் நம்பிக்கை உள்ளது என்றும் மோடி கூறினார்.

இரண்டு மூன்று தசாப்த கால ஸ்திரமின்மைக்குப் பிறகு, ஒரு தீர்க்கமான அரசாங்கம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது என்று மோடி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm modi president motion of thanks top quotes parliament budget session