அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் தளராத நிலையில், பா.ஜ.க மீது எவ்வளவு “சேறு நிறைந்த” குற்றச்சாட்டுகளை வீசினாலும் பரவாயில்லை என்றும், அது தாமரை மலர மேலும் உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கூறினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும், அவ்வளவு பெரிய தாமரை (பா.ஜ.க.,வின் தேர்தல் சின்னம்) பூக்கும்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: அதானி விவகாரம்: கார்கேவின் லூயிஸ் உய்ட்டன் ஆடையை சுட்டிக் காட்டி பா.ஜ.க பதிலடி
நாட்டிற்காக தான் வாழ்ந்து வருவதாகவும், இந்தியாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் விளையாட்டை விளையாடுவதாகவும் பிரதமர் கூறினார். “சிலரின் நடத்தை மற்றும் பேச்சுகள் ஏமாற்றம் அளிக்கிறது, அவை சபைக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும்” என்று மோடி கூறினார்.
பிரதமர் தனது 90 நிமிட உரையின் போது, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார், சமையல் எரிவாயு பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை நீக்குவது முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் மின் இணைப்புகள் வழங்குவது வரை.
காங்கிரஸுக்கு எதிராக புதிய தாக்குதலைத் தொடங்கிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அப்போது மாநிலங்களில் ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார் என்றும், இந்திய அரசியலமைப்பின் 356 வது பிரிவை “தவறாக” பயன்படுத்தியதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது மாநில அரசாங்கங்களை பதவி நீக்கம் செய்தார் என்றும் கூறினார்.
“இந்த நாடு யாருடைய தேசமும் அல்ல. எங்கள் கொள்கைகள் தேசிய மற்றும் பிராந்திய நலன்களை பிரதிபலிக்கின்றன,” என்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு தனது பதிலின் போது உரையாற்றினார். “ஆனால் இப்போது (காங்கிரஸுடன்) அமர்ந்திருக்கும் இவர்களை இன்று நான் அம்பலப்படுத்த விரும்புகிறேன்,” என்று மோடி கூறினார். கேரளாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசை நேரு தலைமையிலான அரசு எப்படி டிஸ்மிஸ் செய்தது என்பதை நினைவுபடுத்தியதன் மூலம், காங்கிரஸுடன் இணைந்து செயல்படும் இடதுசாரிக் கட்சிகளையும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
“மோடி-அதானி, பாய்-பாய்” என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க காங்கிரஸ் “டோக்கனிசத்தை” மட்டுமே கடைப்பிடிப்பதாக மோடி குற்றம் சாட்டினார். “அவர்கள் (காங்கிரஸ்) ‘வறுமை ஒழிப்பு’ என்று கூறுவார்கள், ஆனால் 4 தசாப்தங்களாக எதுவும் செய்யவில்லை, அதே நேரத்தில் நாட்டின் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
அவரது உரையின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அவையில் நடுப்பகுதிக்கு வந்தனர் மற்றும் கெளதம் அதானிக்கு எதிராக ஜே.பி.சி கோரிக்கையை எழுப்பினர். ஆனால், அதானி குழுமம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நேரடியாகக் குறிப்பிடவில்லை.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனம், பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, அதானி குழுமத்தின் நிதிகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டன. அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மக்களவையில் பேசிய ஒரு நாள் கழித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார், அங்கு அவர் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார், 140 கோடி மக்கள் தன் மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு “பாதுகாப்பு கவசம்”, அதனை “துஷ்பிரயோகம்” அல்லது “தவறான குற்றச்சாட்டுகள்” மூலம் துளைக்க முடியாது என்று கூறினார்.
கூடுதல் தகவல்கள் : PTI
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil