2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நரேந்திர மோடி மார்ச் 30-ம் தேதி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: In a first as PM, Modi may visit RSS Nagpur headquarters, hold talks
அன்றைய தினம், மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக நாக்பூருக்கு மோடி செல்கிறார். அப்போது, ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர்களான மோகன் பகவத் உள்ளிட்டோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதவ் நேத்ராலயா, திங்கள்கிழமை அறிக்கையை வெளியிட்டது. பி.டி.ஐ செய்தியின்படி, பகவத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
பா.ஜ.க-வி புதிய தேசிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடையே நடைபெறும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசாங்கத்தின் உறவுகள் இறுக்கமானதாகக் காணப்பட்டது. மே 17 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க உறவு குறித்த கேள்வி பதிலளித்தார். அப்போது, "தொடக்கத்தில் எங்கள் திறன் குறைவாக இருந்த போது ஆர்.எஸ்.எஸ் தேவைப்பட்டது. தற்போது, நாங்கள் வளர்ந்து விட்டோம். அதனால், பா.ஜ.க தானே இயங்குகிறது" எனக் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர்களுக்கு, இது மோடி தலைமையிலான பா.ஜ.க-விடமிருந்து ஒரு சமிக்ஞையாக இருந்தது. இது மோடியின் புகழைக் ஒப்பிடும் போது, ஆர்.எஸ்.எஸ் முன்னோடிகளை குறைவாக மதிப்படுவதாக கருதப்பட்டது.
சரியான தகவல் தொடர்பு இல்லாததால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவை தீர்க்கப்பட்டதாகவும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறினர். இந்த சூழலில், பா.ஜ.க-விற்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாததால், அக்கட்சி எதிர்பார்த்ததை விட குறைவான வாக்குகள் பெற்றதாக நம்பப்படுகிறது.
தேர்தலுக்கு பின்னர், இந்த இடைவெளியை குறைப்பதற்கு பா.ஜ.க தலைமை கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற முக்கியமான மாநில தேர்தல்களான ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பா.ஜ.க வெற்றிபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் அதன் முக்கிய தலைவர்களுடனான மோடியின் பேச்சுவார்த்தை, பல விஷயங்களை தீர்க்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஒரு சந்திப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லியில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடைபெற்றது. அப்போது, மோடி மற்றும் பகவத் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
தேசத்தின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்களை அர்பணித்துக் கொண்டனர் என்று சமீப நாட்களில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருந்தார். எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான உரையாடலின் போது, "ஆர்.எஸ்.எஸ் போன்ற தனித்துவமான இயக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மூலம் என் வாழ்க்கையின் நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன்" என்று மோடி தெரிவித்தார்.
கடந்த மாதம், 98-வது அகில் பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் மோடி கலந்து கொண்டார். அப்போது, "புதிய தலைமுறையினரிடையே இந்தியாவின் சிறந்த பாரம்பரியங்கள் மற்றும் கலாசாரத்தை ஆர்.எஸ்.எஸ் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது" என அவர் கூறினார்.
- Liz Mathew