டெல்லியில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா - சவுதி அரேபியா வியூகக் கூட்டாண்மை கவுன்சிலின் (SPC) முதல் கூட்டத்திற்கு இரு நாட்டு தலைவர்களும் இணைந்து தலைமை தாங்கினர்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடி, இந்தியா-சவுதி அரேபியா கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஸ்திரத்தன்மை, பிராந்தியம் மற்றும் உலக நலனுக்காக இந்தியா-சவுதி அரேபியா இடையேயான உறவு முக்கியமானது என பிரதமர் மோடி கூறினார். மாறும் காலத்திற்கு ஏற்ப நாங்கள் எங்கள் உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கிறோம் என்றும் கூறினார்
முன்னதாக, “இந்தியா மற்றும் சவூதி அரேபியா உறவுகளில் புதிய அத்தியாயம்” என்ற பெயரில் பிரதமர் மோடி தனது டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சவுதி இளவரசரை வரவேற்றார்.
2019 அக்டோபரில் பிரதமர் மோடியின் ரியாத் பயணத்தின் போது SPC உருவாக்கப்பட்டது. இது இரண்டு குழுக்களைக் கொண்டுள்ளது: அரசியல்-பாதுகாப்பு-சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக்கான குழு. செப்டம்பர் 2022 இல் ரியாத்தில் நடைபெற்ற இரு குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறுகின்றன என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
ஜி20 உச்சி மாநாடு மற்றும் அரசுப் முறை பயணமாக இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த சனிக்கிழமை மூன்று நாள் பயணமாக டெல்லி வந்தார்.
இன்று காலை ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் பட்டத்து இளவரசரை வரவேற்றனர். இந்தியாவின் வெற்றிகரமான ஜி20 மாநாட்டிற்கு முகமது பின் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில், இந்தியா, சவுதி அரேபியா, அமெரிக்கா இணைந்து வரலாற்று ஒப்பந்தத்தை அறிவித்தன. அதில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழியாக கப்பல் மற்றும் ரயில் இணைப்பு வழித்தடத்தை தொடங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“