பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
மொத்தம் 272 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பெரும்பான்மை இல்லாத போதும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளார். அடுத்த மாதம் 11ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானை பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றும் இருநாட்டு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒட்டுமொத்த அண்டை நாடுகளிலும் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற தனது கனவை பிரதமர் வலியுறுத்தி பேசியதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பதிலளித்த இம்ரான்கான், பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.