ஹரியானாவில் பா.ஜ.க மூன்றாவது முறையாக பெற்ற வெற்றி 'வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அரசியலின் வெற்றி' என்று பிரதமர் மோடி கூறினார்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. ஹரியானாவில் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற பா.ஜ.க தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவில் மூன்றாவது முறையாக தாமரை மலர்ந்துள்ளது. இது "அரசியலமைப்புச் சட்டத்தின் வெற்றி." ஹரியானா, உத்தரகாண்ட், திரிபுரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க அரசுகள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது வெற்றியை, "வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அரசியலின் வெற்றி" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
"எங்கள் கட்சிக்கு வாக்களித்த மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்கள் காரியகர்த்தாக்களின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்,” என்றும் மோடி கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில் பா.ஜ.க மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும் மோடி கூறினார்.
மேலும், ஹரியானா விவசாயிகள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும், தாங்கள் நாட்டுடனும், பா.ஜ.க.,வுடனும் இருப்பதை காட்டுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
முன்னதாக ஹரியானாவில் பெற்ற வெற்றிக்காக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், "இங்குள்ள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டோம் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த மாபெரும் வெற்றிக்காக அயராது, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த எனது கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மாநில மக்களுக்கு நீங்கள் முழுமையாக சேவையாற்றியது மட்டுமின்றி, எங்களது வளர்ச்சித் திட்டத்தையும் அவர்களிடம் கொண்டு சென்றிருக்கிறீர்கள். இதன் விளைவாக ஹரியானாவில் பா.ஜ.க இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் செயல்பாடு குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் தேசிய மாநாட்டு கட்சியின் "பாராட்டத்தக்க செயல்திறனுக்காக" மோடி வாழ்த்து தெரிவித்தார்.
"ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தத் தேர்தல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவை 370 மற்றும் 35 (A) சட்டங்கள் நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டன மற்றும் அதிக வாக்குப்பதிவைக் கண்டது, இது மக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது, இதற்காக ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொருவருக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.