மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்போம் என்று பா.ஜ.க எம்.பி-க்களுக்கு உறுதியளித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூட்டத்தில், "இந்தியா கூட்டணி முன்வைத்த தீர்மானம் அவர்களுக்கான ஒரு திட்டம் மட்டுமே. ஆனால் எங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. இந்தியாவை ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முழக்கம் அப்படியே உள்ளது. பரஸ்பர அவநம்பிக்கையால் எதிர்க்கட்சி கூட்டணி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகங்காரமானவர்கள்." என்று அவர் கூறினார்.
நேற்று ராஜ்யசபாவில் என்.சி.டி மசோதா மீதான விவாதத்தின் போது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஏற்கனவே தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. இன்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தகவல்படி, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக என்.சி.டி மசோதாவை அரையிறுதி போட்டி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனல் பறக்கும் வாதம்
இன்று நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாதத்தில், அமளி காரணமாக 12 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு சபை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க் கட்சி தலைவர்கள் அனல் பறக்க பேசினர். இந்த விவாதம் வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி தனது பதிலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மொத்தமாக 16 மணி நேரம் நீடிக்கும். 15 தலைவர்கள் பேசுவார்கள். இன்று அமளிக்குப் பிறகு கூடிய கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
1.மணிப்பூர் வன்முறை பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இதுவரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை..?
- மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் 80 நாட்களுக்கு பிறகே பதில் அளித்தார்..? அந்த பதிலும் வெறுமனே 30 வினாடிகள் மட்டுமே இருந்தன.
3.மணிப்பூர் வன்முறை தொடர்பாக மாநில முதலமைச்சர் பைரன் சிங்கை பிரதமர் மோடி பதவியிலிருந்து நீக்காதது ஏன்..?என 3 முக்கிய கேள்விகளை எழுப்பினார். ஆளும் கட்சியின் முதல் பேச்சாளராக பா.ஜ.க எம்பி நிஷிகாந்த் துபே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil