இந்தியாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு உறக்கமில்லாத இரவுகளை கொடுத்தன என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபின், ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை இன்று ( மே 13) பிற்பகல் 3:30 மணியளவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முன்னதாக, அங்கு இருந்த ராணுவ வீரர்களிடம் அவர் உரையாற்றினார்.
இந்திய விமானப்படை வீரர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் தைரியத்தால்தான் ஆப்ரேஷன் சிந்தூர் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கிறது என்று கூறினார். நேற்று (மே 12) இரவு ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றிய நிலையில், இன்று ராணுவ வீரர்கள் இடையே அவரது உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும், இந்தியாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயங்கரவாத இலக்குகளைத் தாக்கும்போது, எதிரிகள் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷத்தை கேட்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், வீரர்களின் தீரத்திற்கு மரியாதை செலுத்தவே தான் இங்கு வந்ததாகக் கூறினார். பாரத் மாதா கி ஜெய்' என்பது வெறும் கோஷமல்ல என்றும், இந்திய ராணுவம் நாட்டிற்காக தங்கள் உயிரை அர்ப்பணிக்க உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளை அவர்களின் முகாம்களிலேயே இந்தியா கொன்றுவிடும் என்றும், உயிர் பிழைக்க அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படாது என்றும் திட்டவட்டமாக மோடி தெரிவித்தார். பயங்கரவாத இலக்குகளை இந்தியா தாக்கிய போது எதிரி தரப்பு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி, இந்தியாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு உறக்கமிக்காத இரவுகளை கொடுத்ததாகவும், விமானப்படை தனது இலக்கை அடைந்து விட்டதாகவும் மோடி கூறினார்.
பாகிஸ்தானின் ராணுவம், கடற்படை, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் முன் தோல்வியடைந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை பாகிஸ்தானை மண்ணைக் கவ்வச் செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மூன்று அம்சக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். இதை, அவர் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதும் குறிப்பிட்டிருந்தார். மேலும், 'புதிய இயல்பு' குறித்தும் அவர் எடுத்துரைத்தார். கடந்த திங்களன்று பிரதமர் மோடி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கோட்பாட்டில் ஒரு "புதிய இயல்பை" ஆப்ரேஷன் சிந்தூர் வரையறுத்துள்ளது என்று கூறியிருந்தார். எந்தவொரு தூண்டுதலுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும், அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தையும் அதன் ஆதரவாளர்களையும் வேறுபடுத்திப் பார்க்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் ஆழமான பகுதிகளுக்குள் சென்று பயங்கரவாத இலக்குகளைத் தாக்கியது, எதிரிகளை அதிர்ச்சியடையச் செய்தது என்று மோடி கூறினார். அனைத்து இந்தியப் படைகளிடமும் உலகின் சிறந்த தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதிநவீன அமைப்புகளை எவ்வாறு பராமரிப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய ராணுவம் "தொழில்நுட்பத்தை தந்திரோபாயத்துடன்" இணைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் தொடர் முயற்சிகள் இருந்தபோதிலும், நமது விமானப்படை தளங்களும், பாதுகாப்பு கட்டமைப்புகளும் எந்தவித சேதமும் இன்றி பாதுகாப்பாக உள்ளன என்று மோடி கூறியுள்ளார்.