ஏழை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே இந்த அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்ற பின் துவங்கிய பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று (25 ம் தேதி ) உரையாற்றினார். அப்போது, ஜனாதிபதி நமது அரசின் நோக்கம், திட்டம், ஆகியன குறித்து விளக்கமாக கூறியுள்ளார். மக்களின் எண்ணங்களை ஜனாதிபதி தனது உரையில் தெளிவுப்படுத்தியுள்ளார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
புதிய இந்தியாவை ,புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம். எங்களின் அரசை மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளமைக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகால சிறப்பான ஆட்சிக்கு நாட்டு மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெறுவதைவிட வேறு பெரிய வெற்றி இல்லை. இந்திய மக்கள் தங்களை விட தேசியத்தை விரும்புகின்றனர். மக்கள் தற்போது எதிர்கால இந்தியாவுக்கு ஓட்டளித்துள்ளனர். வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம்.
2014 ல் நான் கூறினேன் ஏழை மக்களுக்கு அரசு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றேன். கூறிய வாக்குறுதியை நிறைவேற்றினேன். எனது அரசு எப்போதும் ஏழை மக்களுக்காகவே பணியாற்றும். மக்களுக்கு தேவையான திட்டங்களை விவாதித்து நிறைவேற்றுவோம்.
சாதாரண மனிதனின் உரிமை காக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் அரசின் விருப்பம். நாங்கள் எதையும் திசை திருப்பவோ, நீர்த்து போக செய்யவோ இல்லை. சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம் வழங்கியது மக்கள் சிந்தனையை தொட்டது.
விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். எதிர்கட்சியினர் விவாதங்களும் மதிக்கப்படும். இந்த அவைக்கு வந்துள்ள அனைத்து எதிர்கட்சியினரையும் வரவேற்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவருக்கும் ஒற்றுமை மிக அவசியம்.
காங்கிரஸ் அரசு உண்மை நிலையில் இருந்து விலகி இருந்தது. இந்த அரசு சிறப்பானதாக செயல்படுகிறது. நாங்கள் எந்த சாதனைகளையும் எதிர்ப்பது இல்லை. காங்கிரஸ் மற்றவர்களின் சிறந்த பணியை அங்கீகரிப்பதில்லை. கடந்த கால பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன்சிங்கை கூட காங்கிரஸ் உரிய மரியாதை அளிக்கவில்லை. நாங்கள் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கினோம்.
காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்ஸியால் ஜனநாயகம் பாதிப்புக்குள்ளானது. ஜனநாயகம் சிறை வைக்கப்பட்டது. பத்திரிகைகள் முடக்கப்பட்டன. அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த பாவங்களை யாரும் மறக்க முடியாது. இந்திய ஆத்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் எமர்ஜென்ஸி. சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தி, போன்ற பலரை நாம் மறக்க கூடாது.
சாதாரண மனிதர்கள் மனதில் காந்தி இடம் பிடித்தார். இது போன்ற உணர்வு நம் அனைவருக்கும் வர வேண்டும். காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் தண்ணீர் என்பது எங்களின் மந்திரம். தற்போது அனைவருக்கும் தண்ணீர், மின்சாரம் கிடைத்துள்ளது. தண்ணீரை காத்திட அனைத்து எம்பிக்களும் உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்