உக்ரைன் மீது ரஷியா இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார்.
ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டதாவது:
ரஷியாவிற்கும் நேட்டோ குழுவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நியாயமான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
போரை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களின் பாதைக்கு திரும்புவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக "தெளிவுபடுத்தியதற்கு" நன்றி என்று ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்ததோடு, உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவி கேட்டார். "தேவையான அறிவுறுத்தல்கள்" வழங்கப்படும் என்று புதின் கூறினார் என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஷியா- உக்ரைன் போர்: காரணம் என்ன? முழுப் பின்னணி
இதைத் தொடர்ந்து, வாஷிங்டனில், இந்த விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவுடன் ஒத்திசைவாக இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நாங்கள் இன்று (இந்தியாவுடன்) ஆலோசனையில் ஈடுபடுகிறோம். இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை’’ என்றார்.
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர்மட்ட அமைச்சர்களுடன் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு ரஷிய அதிபருடன் அவர் தொலைபேசியில் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் தொலைபேசி அழைப்பின் மூலம், இந்தியா இரு நாடுகளிடையே அமைதியை விரும்புவது தெரியவந்துள்ளது. இந்த நோக்கத்தை இரு தரப்புக்கும் அது சமிக்ஞை செய்துள்ளது.
ஜெய்சங்கர் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடனும் பேசினார்.
மேலும் அவரது உக்ரைனிய வெளியுறவு அமைச்சருடனும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil