இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தியா வந்த அவரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் வரவேற்றார். இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
இதன்பின்னர், இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை, யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கையெழுத்தாகியது.
இலங்கை தமிழர்கள் நலன்
இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றதாகவும், மனிதாபிமான அணுகுமுறையுடன் அதைக் கையாள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இரு நாட்டுக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை இலங்கை தரப்பிலிருந்து வந்ததாகவும் தெரியவருகிறது.
அதேவேளையில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் குடிமக்களுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா பங்களிக்கும் என்றும் மோடி அறிவித்தார்.
கொழும்பு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைப் பற்றிக் குறிப்பிட்ட மோடி, இந்திய மக்கள் தங்கள் போராட்ட நேரத்தில் இலங்கையுடன் இருப்பதாகக் கூறினார். மேலும் ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை என்பது இந்தியாவின் நலன் மட்டுமல்ல, முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கும் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அதிபர் விக்கிரமசிங்க தனது அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை பற்றி என்னிடம் கூறினார். இலங்கை அரசு தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு "மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை" உறுதி செய்வதோடு, 13வது திருத்தத்தை அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை கொழும்பு நிறைவேற்றும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் தமக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி வருகின்றது. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
விக்ரமசிங்க தனது ஊடக அறிக்கையில், "நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பல கூறுகள்" ஆகியவற்றிற்காக இந்த வாரம் அவர் முன்வைத்த "விரிவான முன்மொழிவை" பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறினார். சமத்துவம், நீதி, சுயமரியாதை போன்ற தமிழ் சமூகத்தின் விருப்பங்களை நிவர்த்தி செய்யும் அரசியல் தீர்வை இந்தியா தொடர்ந்து எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக விக்ரமசிங்கவிடம் மோடி தெரிவித்ததாக வெளியுறவு செயலாளர் குவாத்ரா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடல்சார் களத்தில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அதிகரித்துவரும் ஊடுருவல் தொடுக்கப்பட்டது. “நாங்கள் அண்டை வீட்டுக்காரர்கள். எங்களிடம் நீண்டகால மற்றும் விரிவான உறவு உள்ளது. கவலைகளைப் பற்றி பேசுவது இயற்கையானது, ”என்று குவாத்ரா, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இருப்பு பேச்சுவார்த்தையில் காணப்பட்டதா என்று கேட்டபோது கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.