PM Modi takes Covid 19 Covaxin In Delhi AIIMS : இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது. சீரம் நிறுவனத்தால், இந்தியாவில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில்,
“எய்ம்ஸில் எனது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். கொரோனா தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த நம் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் பணியற்றிய செயல் பாராட்டத்தக்கது. கொரோனா தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றாக, இணைந்து இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டுடன் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இன்று அதிகாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் பி.நிவேதா என்பவரால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவருடன் இருந்த இரண்டாவது செவிலியர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்தியாவின் கொரோனாதொற்று பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கும் நேரத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஆனால், தற்போது கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"