கோவிட் தொற்று தடுப்பு மருந்து உற்பத்தி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத், ஐதராபாத், புனே ஆகிய மூன்று நகரங்களுக்கு நேரடி பயணம் மேற்கொண்டார். முன்னதாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில்," கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பு மருந்து உருவாக்கி வரும் விஞ்ஞானிகளை நேரில் பார்வையிட ஆவலாக உள்ளேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்து கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
முதலில் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் சடில்லா மருந்து தயாரிப்பு நிலையத்திற்கு பயணம் செய்தார்.
இதுகுறித்து தமது ட்விட்டர் செய்தியில், “ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தால் மரபணுவை மையமாகக்கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசியை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்பப் பூங்காவிற்கு நேரில் சென்றேன். இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவிற்கு எனது பாராட்டுக்கள். அவர்களின் இந்தப் பயணத்தில் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பின்னர் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்திற்கு பயணம் செய்தார்.
"ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து குறித்து விளக்கினார்கள். இதுவரையிலான அவர்களது பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளை பாராட்டினேன். தடுப்பு மருந்தை துரிதமாக உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இவர்கள் இணைந்து பணியாற்று கிறார்கள்," என்று டிவிட்டரில் மோடி பதிவிட்டார்.
இந்த மையத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து 22 மாநிலங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
பின்னர் அவர் புனேயில் உள்ள ஸீரம் ஆய்வகத்திற்கு சென்று கோவி ஷீல்ட் தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாகவும் அவர் அப்போது ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே, நாடு முழுவதும் கோவிட்-19-னால் பாதிக்கப்பட்ட சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை 4.87 சதவீதமாக உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 ஆயிரத்து 322 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil