மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் நான்காவது வாரமாக நீடிக்கும் நிலையில், ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நரேந்திர மோடி வரும் 25ம் தேதி உரையாடுகிறார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை மோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்தய அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுக்கள் நடத்திட வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறித்து வந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்திய ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளில் பெரிய உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள், " மூன்று வேளான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிடப்போவதில்லை" என்று தீர்கமாக தெரிவித்தனர்.
மேலும்," திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற உகந்த சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். உச்சநீதிமன்றமும் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கலாம் என்று அறிவுறித்தியது. இந்த யோசனை, நல்ல சூழலை உருவாக்கித் தரும்” என்று தெரிவித்தனர்.

முன்னதாக, மத்தியப்பிரதேச விவசாயிகள் கூட்டமைப்பினருடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர், விவசாயிகளின் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தின்போது மட்டும் வாக்குறுதிகளை கூறுவதாகவும், விவசாயிகளின் நலனுக்காக சட்டத்தை இயற்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை தான் என்று குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் விவசாயிகளுடன் உரையாடிய அவர், எந்த ஒரு பிரச்சனையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என்று கூறினார்.