Maharashtra | Sharad Pawar | Pm Modi: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடந்து வரும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 4 ஆம் தேதிகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 4வது கட்ட தேர்தல் வருகிற 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு 7 ஆம் கட்ட தேர்தலின் போது நடைபெற உள்ளது. இதனையடுத்து, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக மோடி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
மோடி பேச்சு
இந்நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் சிறிய மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் நெருங்கி வரலாம் அல்லது இணையலாம் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) என்.சி.பி (எஸ்.பி) தலைவர் சரத் பவார் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டார். இதனைக் கேலி செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரது பெயரைக் குறிப்பிடாமல், சரத் பவாரின் கட்சியை போலி என்.சி.பி கட்சி என்றும், காங்கிரஸுடன் இணைவதை விட "மரியாதையுடன்" பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தால் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PM tells Sharad Pawar better to join us; NCP (SP) chief says no, flags Modi remarks on Muslims
மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் மோடி பேஸ்க்கையில், "40-50 ஆண்டுகளாக மகாராஷ்டிராவை சேர்ந்த உயரிய தலைவர் ஒருவர் அரசியலில் உள்ளார். இந்த நாட்களில் அவர் முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறார். பாராமதி தேர்தலுக்குப் பிறகு, அவர் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். பலருடன் கலந்துரையாடிய பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிறிய மாநிலக் கட்சிகள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமானால், காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு போலி என்.சி.பி-யும், போலி சிவசேனாவும் காங்கிரஸுடன் இணைவதற்கு முடிவு செய்துள்ளன என்று அர்த்தம். காங்கிரஸுடன் இணைந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இறப்பதற்குப் பதிலாக, பெருமையுடன் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுடன் கைகோர்த்துக்கொள்ளுங்கள், உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும்.”என்று பிரதமர் மோடி கூறினார்.
சரத் பவாரின் என்.சி.பி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் இருந்த அவரது உறவினர் அஜித் பவார் 15 எம்.எல்.ஏ-களுடன் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். இதேபோல், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இருந்த 22 எம்.எல்.ஏ-களில் 9 பேரை அழைத்துக்கொண்டு பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஆனார்.
பவார் பதிலடி
இந்த நிலையில், பிரதமரின் கேலிக்கு பதிலடி கொடுத்துள்ள சரத் பவார், நேரு-காந்தி சித்தாந்தத்தை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களுடன் கைகோர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மே 4 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொள்ளும். அல்லது காங்கிரஸுடன் இணைவதுதான் தங்கள் கட்சிக்கு உகந்தது என்று அவர்கள் கருதினால், அந்த கட்சியுடன் இணைவதற்கான வாய்ப்பை அவர்கள் பார்க்கலாம்." என்றார்.
இது அவரது சொந்தக் கட்சியான என்.சி.பி (சரத் பவார் அணி) கட்சிக்கு பொருந்துமா என்று கேட்டதற்கு, “காங்கிரஸுக்கும் எங்களுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. கருத்தியல் ரீதியாக, நாங்கள் காந்தி, நேரு சித்தாந்தத்தை கொண்டவர்கள்.
நேரு-காந்தி சித்தாந்தத்தை நாங்கள் போற்றுகிறோம். அந்த சித்தாந்தத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் முஸ்லிம் சமூகம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். நான் அவற்றைக் கேட்டிருக்கிறேன். நாம் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் அனைத்து சமூகங்களையும் ஒன்றாக கொண்டு செல்ல வேண்டும். ஒரு சமூகத்தை ஓரங்கட்டிவிட்டு முன்னேற நினைக்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறார். அவருக்கு எதிராக பொதுமக்களின் கருத்துக்கள் உருவாகி வருவதால் தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இவ்வாறு கருத்துகளை வெளியிடுகிறார். மோடி எங்களது தேவையை உணர்ந்திருக்கலாம், ஆனால் நாங்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தை விட்டுவிட்டு அவர்களுடன் கைகோர்க்க மாட்டோம்.
இன்று நமது நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயக அமைப்பு ஆபத்தில் உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மற்றும் மத்திய தலைமையின் பங்கு இல்லாமல் இந்த கைதுகள் நடக்காது. பிரதமருக்கு நமது ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை இல்லை. நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத எந்த ஒரு நபருடனும், கட்சியுடனும் அல்லது சித்தாந்தங்களுடனும் நாங்கள் கைகோர்க்க முடியாது." என்று சரத் பவார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“