நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ள நிலையில், 3-வது முறையாக உத்திரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திரமோடி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க : PM Modi vs Ajay Rai, Varanasi Lok Sabha Election Result 2024: Who is winning the Varanasi Lok Sabha seat?
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கியது. 7- கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ந் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 4) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இந்திய அளவில் பா.ஜ.கவும், தமிழகத்தில் தி.மு.க.வும் முன்னிலை பெற்று வருகிறது.
இதனிடையே கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், உத்திரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திரமோடி 3-வது முறையாக நடப்பு தேர்தலிலும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிட்டார். 2019 ஆம் ஆண்டில், மோடி 6.74 லட்சம் வாக்குகள், 63.9% வாக்குகளைப் பெற்று, சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவை தோற்கடித்தார்.
அதேபோல் 2014ல் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸின் அஜய் ராயை எதிர்த்து 5.81 லட்சம் வாக்குகள் (56.4%) பெற்று வெற்றி பெற்றார். இதனிடையே தற்போது 2024 தேர்தலில், காங்கிரஸின் அஜய் ராயை எதிர்த்து மோடி தேர்தலில் போட்டியிட்டார். அதே நேரத்தில் பிஎஸ்பி சார்பில், அதர் ஜமால் லாரி போட்டியிட்டார். வாரணாசியில் மோடிக்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு எதிரான போக்கை பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்பும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்தது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 6 ஆயிரம் வாக்குகள் வரை அதிகம் பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.
அதன்பிறகு நடந்த வாக்கு எண்ணிக்கையில் மோடி அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். 23,635 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து சுற்றுகளில் முன்னிலை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதில் கடந்த 2019 தேர்தலில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த மோடியில் வெற்றிக்கான வாக்குகள் சரிந்துள்ளது.
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதி மற்றும் ராமர் கோயில் பாஜகவுக்கு ஒரு முக்கிய தேர்தல் திட்டமாக இருந்ததால் இருந்த நிலையில், இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங், சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரஷாத்திடம் தோல்வியை சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உத்திரபிரதேச அமைச்சரும் பாஜக வேட்பாளருமான தினேஷ் சிங்கை தோற்கடித்தார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரபிரதேசத்தில் உள்ள கெரி தொகுதியில் 25,494 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உத்கர்ஷ் வர்மா 'மதுர்' தோற்கடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.