பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதி தருவதை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்லட் ரயில்:
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், மோடியின் கனவு திட்டமாகும்.இந்தத் திட்டத்தின் மதிப்பு 1 லட்சம் கோடியாகும். மொத்தத் தொகையில் 88,000 கோடி ரூபாயை ஜப்பான் தருவதாகவும், மீதமுள்ள 22,000 கோடி ரூபாய் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளால் தரப்படும் என்று பேச்சு வார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.
புல்லட் திட்டம் குறித்து மோடிக்கு அதிகளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் நிதி தருவதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த மே மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி தலைமையில் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி விழா நடைப்பெற்றது. வரும் 2023 ஆம் ஆண்டு புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம் ஆரம்பம் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
புல்லட் ரயில்
ஜப்பானிய தூதர் இங்கு வந்து நிலம் கையகப்படுத்தப்படுவதால், பாதிக்கப்படும் விவசாய நிலங்களையும், சூழலை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். நாளுக்கு நாள் பிரச்சனை பெரிதான நிலையில் புல்லட் திட்டத்திற்உ நிதி வழங்குவதை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நிதியுதவியை நம்பி புல்லட் ரயிலுக்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நிதி நிறுத்தி வைக்கப்பட்டதை இதைத் தேசிய அதிவேக ரயில் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் மோடியின் கனவு திட்டம் இந்தியாவில் நனவாகுமா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.