இமாச்சலப் பிரதேசத்தில் விளையும் ஆப்பிள்களை பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானி கிலோ ரூ.70-72க்கு வாங்கி ரூ.250-300க்கு விற்கிறார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கிய ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் நிகழ்ந்த இடமான தியோக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார் 61 வயதான முன்னாள் மாநிலத் தலைவர் குல்தீப் சிங் ரத்தோர்.
இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
உங்கள் தேர்தல் வியூகம் என்ன?
இமாச்சலப் பிரதேசத்தில் விலைவாசி உயர்கிறது. நாங்கள் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம். மாநிலத்தின் வளர்ச்சி ஸ்தம்பித்துள்ளது, பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்னைகள் மட்டுமல்ல, அவர்களை எப்படி தட்டியெழுப்ப வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.
ஆப்பிள் விளையும் மாநிலத்தில் நடைபெற்ற விவசாய போராட்டங்கள் பற்றிய உங்களின் கருத்து என்ன?
பாரதிய ஜனதா அரசசாங்கம் ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கிறது. முற்றிலும் அவர்களது கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் அதானி, மாநிலத்தில் விளையும் ஆப்பிள்களை கிலோ ரூ.70 முதல் ரூ.72க்கு வாங்கி ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கிறார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் எப்படி செயல்படும்?
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எங்களது வெற்றி பிரகாசமாக உள்ளது. பாஜகவின் மீண்டும் ஆட்சி என்ற கனவு தவிடுபொடி ஆகும்.
நீங்கள் முதலமைச்சர் போட்டியில் உள்ளீர்களா?
நான் அதில் இல்லை. கட்சியின் உயர்மட்ட குழு அதனை நிர்ணயம் செய்யும்.
மல்லிகார்ஜுன் கார்கே கட்சியை வழிநடத்துவது பற்றி?
காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது என்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியது. ராகுல் காந்தியின் பயணம் கட்சியை வலுப்படுத்தும்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் இமாச்சலப் பிரதேசம் இல்லையே?
ஆம். ஆனால் நாங்கள் இங்கு வர கோரிக்கை வைத்துள்ளோம்
இவ்வாறு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் குல்தீப் சிங் ரத்தோர் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்துக்கு நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil