2019 -2020ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை, ஜூலை 5ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார். நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, 30ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட 57 பேர் பதவியேற்றனர். ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவிற்கு உள்துறை, நிர்மலா சீத்தாராமனுக்கு நிதித்துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை என அனைவருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம், 31ம் தேதி மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜூன் 17ம் தேதியிலிருந்து ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும்.
லோக்சபா சபாநாயகர் தேர்வு ஜூன் 19ம் தேதி நடைபெறும்.
ஜூன் 20ம் தேதி - பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
ஜூலை 5ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார்.