நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, " பண்டிகை காலத்தில் அனைவரும் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,கவனக்குறைவு காரணமாக முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்தால், நீங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், குடும்பத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று வலியுறித்தினார்.
வயலில் இருந்து பயிர்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரை ஒருவர் ஓய்வெடுக்கக்கூடாது என்ற கபீர் கவிதை வரிகளையும், எதிரி,நோய் உள்ளிட்டவற்றை குறைவாக மதிப்பீடு செய்ய கூடாது ராம்சரித் மனாஸின் வரிகளையும் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, " ஊரடங்கு முடிந்திருந்தாலும், நோய்த்தொற்று இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று வலியுறித்தினார்.
கோவிட்-19-க்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு - பகல் பாராது கடுமையாக போராடி வருகின்றனர், தடுப்பூசி கிடைத்தவுடன் நாட்டு மக்களுக்கு அதை முறைப்படி கிடைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் நமது பெரும் பலம் என்று குறிப்பிட்ட பிரதமர், " பரிசோதனையில் 10 கோடி என்ற மைல் கல்லை இந்தியா விரைவில் கடக்கும். அதிக அளவிலான மக்களுக்கு நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சுயநலமின்றி பணியாற்றுகிறார்கள். இந்த முயற்சிகளுக்கு இடையே கவன குறைவாக இருப்பதற்கு இது நேரமில்லை. வைரஸ் மறைந்துவிட்டது, கொரோனாவிடமிருந்து இனி ஆபத்து இல்லை என்றும் நினைப்பதற்கான நேரம் இதுவல்ல" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 83 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் போன்ற பல நாடுகளில், இந்த எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டது. மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா நீண்ட தூரம் வந்துள்ளது. கொரோனா வைரஸின் ஆபத்து இன்னும் முடியவில்லை. மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயலாற்றி வருகிறது மற்றும் சீரான நிலையில் உள்ளது" என்றும் தெரிவித்தார்.