/tamil-ie/media/media_files/uploads/2018/06/modi15.jpg)
Modi in 4th Niti Aayog Meeting
நான்காவது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற நரேந்திர மோடி, இந்தியா எதிர் நோக்கி காத்திருக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டிருக்கின்றார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து நான்காண்டுகள் ஆன நிலையில், ஒவ்வொரு வருடமும் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் நடத்தப்படும் கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம், நிதி, வர்த்தகம், வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அறிக்கை வெளியிடப்படும்.
சனிக்கிழமையன்று இதில் பேசிய நரேந்திர மோடி இந்தியா சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சனையான விவசாயிகளின் ஊதிய உயர்வு பற்றி பேசியிருக்கின்றார். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், மிஷன் இந்திராதனுஷ் போன்ற திட்டங்கள் எப்படியாக செயல்படுகின்றது என்பதைப் பற்றிய விளக்கங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றது.
நான்காவது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.7 சதவீதம் உயர்ந்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டிருக்கின்றார். முத்ர யோஜனா, ஜான் தான் யோஜனா, மற்றும் ஸ்டேண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களால் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி முன்னேறியிருக்கின்றது என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
”புதிய இந்தியா - 2022 என்ற நோக்கம், இந்திய மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் களைவதற்கென உருவாக்கப்பட்டதாகும். தங்கள் மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது இந்த கூட்டம். தங்கள் மக்களின் கனவினை நிறைவேற்றும் பொறுப்பு இங்கு அமைந்திருக்கும் ஒவ்வொரு முதலமைச்சருக்கும் இருக்கின்றது” என்று கூறியுள்ளார் மோடி. ஜிஎஸ்டி போன்ற சவால் நிறைந்த திட்டங்களை எப்படி நிதி ஆயோக் மக்களிடம் சுலபமாக சென்று சேர்த்தது என்பது தொடர்பாகவும் அவர் பேசினார். மேலும், இதுவரை 1.5 லட்சம் சுகாதார மையங்கள் இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கின்றது என்றும் இதன் மூலம் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/niti-aayog-300x167.jpg)
ஸ்வச் பாரத் மிஷன், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, ஸ்கில் டெவலப்மெண்ட் போன்ற திட்டங்களை துறை சார்ந்த அமைச்சகத்தின் உதவியுடன் மக்களிடம் சென்று சேர்த்ததில் பெரும் பங்கு அனைத்து மாநில முதல்வர்களையும் அவர்களின் கமிட்டிகளையுமே சாரும். மத்திய அரசிடமிருந்து சென்ற ஆட்சியில் மாநில அரசு பெற்றுக் கொண்டிருந்த நிதி 6 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து இந்த ஆட்சியில் 11 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கின்றது. ப்ரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, சௌபாக்யா, உஜாலா, ஜான் தான் யோஜனா, ஜீவன் ஜோதி யோஜனா, சுரக்ஷா பிமா யோஜனா, மற்றும் மிஷன் இந்த்ராதனுஷ் போன்ற திட்டங்களை இன்னும் விரைவாக மக்களிடம் எப்படி சேர்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், சில முக்கிய மத்திய அமைச்சர்களுக்கும், மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீ, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தர ராஜே, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் இதில் பங்கேற்றார்கள். டெல்லி முதலமைச்சர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். ஏற்கனவே நேற்று டெல்லியில் தனியாக அலோசனைக் கூட்டம் நடத்திய மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தி வரும் பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.