உயர் செயல்திறன் உள்ள மூன்று கொரோனா மருத்துவப் பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இவை கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-இன் தேசிய மையங்களில் அமைந்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் தினமும் சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகளை செய்யும் அதிநவீன, உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதால், நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குணம் அடைபவர்களின் விகிதமும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிகமாக உள்ளது என்றும், நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது என்று கூறினார்.
கொரோனா அல்லாத நோய்களின் பரிசோதனை வசதிகளும் இந்த ஆய்வகங்களில் உள்ளது. எனவே நோய் பரவல் காலம் முடிந்த பிறகு ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., காசநோய், சி.எம்.வி. பாதிப்பு, பாலியல் நோய்கள், நெய்செரியா, டெங்கு போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மும்பையில் மேற்கொள்ளப்படும் `வைரஸை விரட்டுவோம்' முன்முயற்சி பற்றி விளக்கிய உத்தவ் தாக்கரே, நிரந்தரமாக தொற்றுநோய் மருத்துவமனைகளை உருவாக்க வேண்டியது அவசியத்தை எடுத்துரைத்தார்.
நோய் பாதித்தவர்களைத் தடமறிதல், டெலி மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துதல் பற்றியும், மாநிலத்தில் இப்போதுள்ள மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் பற்றி மம்தா பானர்ஜி பேசினார்.
மாநிலத்தில் மருத்துவப் பரிசோதனை வசதியை அதிகரிப்பது பற்றி குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், தினசரி ஆண்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil