வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, நெதர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.
போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 24-ம் தேதியன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
தனது பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுக்கல் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், வர்த்தகம், தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அந்நாட்டு அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், முதல்முறையாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகச்சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது என அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூடினார். மேலும், இது தனக்கான வரவேற்பு அல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான வரவேற்பு என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தீவிரவாத ஒழிப்பு, ராணுவ கூட்டு பயிற்சி என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தான் மண்ணில் இருந்து மற்ற நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஊக்குவிக்காமல் தடுத்து நிறுத்துவதை அந்நாடு உறுதி செய்ய வேண்டும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதே எங்களுடைய முன்னுரிமைகளில் முதன்மையானது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதேபோல், தீவிரவாத ஒழிப்பு, தீவிரவாதமயமாக்கல் போக்குக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம் எனவும், தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதும் பாதுகாப்பான உறைவிடமுமே எங்களது முக்கிய நோக்கம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, தனது பயணத்தின் இறுதி நாடாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு முக்கியத் தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி, அவர்களுடன் பருவநிலை மாற்றம், தீவிரவாத ஒழிப்பு, உலக விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.